
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (டிச. 17) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை உயர்தர கல்வி அமைப்பாக (Centre for Excellence) உருவாக்குவதற்கு ராம் கோபால் ராவ் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு அளித்துள்ள பரிந்துரைகள் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி வெளியாகியுள்ளது.
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதால், ஐஐடி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு தற்போது உள்ள இட ஒதுக்கீடு முறை தேவையில்லை என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர் பணி இடங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்றும் ராம் கோபால் ராவ் குழு பரிந்துரை அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
ஐஐடி கல்வி நிறுவனங்களை முழுக்க முழுக்க உயர் சாதி ஆதிக்க நிறுவனங்களாக மீண்டும் மாற்ற, ஆராய்ச்சி கல்வி மற்றும் உயர்தர கல்வி அமைப்பு என்றெல்லாம் ஏமாற்றி சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
மண்டல் குழு அறிக்கையின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 93ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும், அதனையொட்டி கொண்டுவரப்பட்ட தனிச் சட்டமும் (Act 5 of 2007) செல்லுபடி ஆகும் என்று 10.04.2008 அன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பு கூறியது.
இதன் அடிப்படையில், ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு உரிமை என்பது அரசியலமைப்புச் சட்டப்படி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.
மத்திய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பதற்குச் சட்டம் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கி இருப்பவர்களுக்கு என்று பெரியார், அம்பேத்கர் போராடி பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டுக் கோட்பாட்டையே தகர்க்கும் வகையில், பொருளாதார அளவுகோலைத் திணித்தது பாஜக அரசு.
தகுதி, திறமை என்று பேசி மோசடி செய்து வந்த கூட்டம், தற்போது பாஜக அசுர பலத்துடன் ஆட்சி பீடத்தில் வீற்றிருப்பதால் சமூக நீதியைச் சாய்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
இதனைக் கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, பட்டியலின, பழங்குடி மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment