
சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து வரும் சனிக்கிழமை மத்தியப் பிரதேசத்தில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சிலிண்டர் விலை இந்த மாதத்தில் தொடர்ந்து 2-வது முறை உயர்த்தப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு முன்பு டிசம்பர் 1-ம் தேதி சிலிண்டருக்கு ரூ.50 விலை உயர்த்தப்பட்டது. இதனால் ரூ.610 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.660 ஆக அதிகரித்தது. இப்போது மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.710 ஆக சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கரோனா பாதிப்புகளுக்கு இடையில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுளள இத்தருணத்தில் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாமல் மத்திய அரசு விலையை உயர்த்தி வருவதாக நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ம.பி.யின் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் கூறியதாவது:
"சமையல் (எல்பிஜி) எரிவாயு சிலிண்டர்களின் விலை சமீபத்தில் ரூ.100 அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை விகிதங்கள் உயர்ந்தபின்னர் சிலிண்டர் மானியத்திற்கான தடயங்கள் எதுவும் இல்லை. மக்களிடையே பொருளாதாரம் மந்தநிலையில் உள்ள இந்த நேரத்தில் பாஜக இந்த விலை உயர்வைக் கொண்டுவந்துள்ளது''.
இவ்வாறு கமல்நாத் தெரிவித்தார்.
மாநிலம் தழுவிய போராட்டம்
மத்தியப் பிரதேசத்தில் போராட்டம் நடத்தப்படுவது குறித்து மாநிலக் கட்சி செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தா வியாழக்கிழமை பிடிஐயிடம் கூறுகையில், ''மத்திய அரசின் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு திடீர் விலை உயர்வு மக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் சனிக்கிழமை டிசம்பர் 19 அன்று மத்தியப் பிரதேசத்தில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தும்.
மாநிலத்தில் உள்ள அனைத்து மகாத்மா காந்தியின் சிலைகளுக்கு அருகிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளோம். ஒவ்வொரு மாவட்ட மற்றும் தொகுதிவாரியாகப் போராட்டங்கள் நடத்தப்படும்'' என்றார்.
No comments:
Post a Comment