உலகில் உள்ள மனிதர்களில் ஏழு நபர்களில் ஒருவர் திறந்தவெளி கழிப்பறையை தான் பயன்படுத்தி வருவதாக யூனிசெப் தெரிவித்துள்ளது. திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகளால் பல லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உணவு, உடை, இருப்பிடம் இவற்றுடன் சேர்ந்து கழிப்பறை தேவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள நவம்பர் 19-ம் தேதி உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கழிப்பறை சுகாதாரத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடந்த 2001-ம் ஆண்டு முதல் நவம்பர் 19-ம் தேதி உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு யூனிசெப் வெளியிட்ட தகவலின் படி உலகில் இருக்கும் மனிதர்களில் ஏழு நபர்களில் ஒருவர் திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்தும் 10 நபர்களில் 9 பேர் கிராமங்களில் வசிப்பதாகவும், இந்தியாவில் சுமார் 5.64 கோடி மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் உலகிகேயே அதிக திறந்தவெளி கழிப்பறை உள்ள நாடாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உலக அளவில் திறந்தவெளி கழிப்பறைகளை பயன்படுத்தும் மக்களில் 75% பேர் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, நைஜீரியா மற்றும் எத்தியோபியா ஆகிய நாடுகளில் உள்ளதாகவும் யூனிசெப் தெரிவித்துள்ளது.
நோய் பாதிப்பு
ஒரு கிராம் மலத்தில் மில்லியன் கணக்கான வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணி கிருமிகள் உள்ளன. இதனால் ஆண்டுக்கு இந்தியாவில் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள சுமார் 1 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்பதால், குழந்தைகள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் வயிற்றுப்போக்கு மற்றும் பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. யூனிசெப் அமைப்புடன் இணைந்து இந்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு முதல் திறந்தவெளி கழிப்பறை இல்லா இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 706 மாவட்டங்கள் மற்றும் 6 லட்சத்து மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் திறந்தவெளி கழிப்பறை இல்லா இடமாக கடந்த ஜனவரி மாதம் தெரிவிக்கப்பட்டது.
உலக கழிப்பறை தினமான இன்று இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு
ட்விட்டரில், "உலக கழிப்பறை தினமான இன்று திறந்தவெளி கழிப்பறை இல்லா
இந்தியாவை உறுதி செய்வோம். தூய்மை இல்லா பழக்கம் ஊட்டச்சத்து குறைபாடு
மற்றும் நோய் தொற்றுக்கு வழிவகுக்கும். இதனால் சுத்தம் தான் நமது முதல்
நோக்கமாக இருக்க வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment