தலைநகர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில், மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, இந்த சட்ட மூலம் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயத்தை மத்திய அரசு முற்றிலும் கைவிட்டு, நெல், கோதுமை, கொள்முதல் செய்வதை முற்றிலும் கைவிட முயற்சிக்கிறது. வேளாண் வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு நிதி பெறுகிறோம் என்ற பெயரில் பெரு முதலாளிகளை ஊக்கு விக்குகிறது. ஆன்லைன் டிரேட் என்கிற பெயரில் உலக வர்த்தக சூதாட்டத்தை சட்டம் அனுமதிக்கிறது. எனவே இந்த சட்டம் விவசாயிகளை பேரழிவு கொண்டு செல்வதோடு சிறு வணிகர்களையும் ஒட்டு மொத்தமாக ஒழிக்கும் என விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக, வட மாநிலங்களில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனையடுத்து, வட மாநில விவசாயிகள் ஒன்று கூடி, தலைநகா் தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இனிடையே, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் விவசாயிகள் பேரணியைத் தடுத்த காவல்துறையினர், அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளையும், தண்ணீரைப் பாய்ச்சியும் விரட்டினர். அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
டில்லியில் புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இதனை ஏற்க விவசாயிகள் மறுத்துவிட்டனர். மேலும், கடும் குளிரில் சாலைகளில் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதனிடையே, விவசாயிகளுக்கு எந்த வகையிலும் இந்த சட்டம் பாதிப்பை ஏற்படுத்தாது என பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
இந்நிலையில், விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை டெல்லியில் நாளை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment