வடஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு அதிபராக இருந்த கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்டது. அதன்பின் அங்கு அதிகாரத்தை கைப்பற்றும் முனைப்பில் போராட்டம் வெடித்துள்ளது. போராளிக் குழுக்கள் அரசுப்படையினர் இடையேயான மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அந்நாட்டு மக்கள் லிபியாவில் இருந்து வெளியேறி ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். பெரும்பாலானோர் சட்ட விரோதமாக ஆபத்தான முறையில் கடல் பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், லிபியா நாட்டின் திரிபோலி இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹாம்ஸ் என்ற நகரின் பகுதிக்குள் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் 120-க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு படகில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், மோசமான வானிலை காரணமாக அகதிகள் சென்ற படகு கடலில் தத்தளித்து பெரும் போராட்டத்திற்கு பிறகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்தவர்களில் 74 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல் மற்றொரு படகும் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். எஞ்சியோர் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களால் மீட்கப்பட்டனர்.
இதனால், லிபியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரே நாளில் நடந்த படகு விபத்துக்களில் அகதிகள் 94 பேர் உயிரிழந்தனர்.
newstm.in

No comments:
Post a Comment