
கோவையில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் சிறப்பாகச் செயல்பட்ட 4 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் (பிடிஏ) செயல்பாடுகளை மேம்படுத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பெற்றோர் - ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தலா ஒரு பள்ளிக்குப் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
இதன்படி, ஆகஸ்ட் 15, நவம்பர் 14 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், மாதம் ஒரு நாளாவது பிடிஏ கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். அதிக நன்கொடை பெற்று, பள்ளி வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆலோசனை கூட்டங்களில் போதிய உறுப்பினர்கள் இருந்திருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளின்படி பரிசு தொகைக்கான பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 4 பள்ளிகள் வீதம் தலா ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டு கோவையில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் சேத்துமடை, அண்ணாநகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, கோவை கல்வி மாவட்டத்தில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, பேரூர் கல்வி மாவட்டத்தில் ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தில் செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகங்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா வழங்கினார்.
பரிசு பெற்றுக்கொண்ட கோவை ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் தலைவர் பரமசிவம் கூறும்போது, 'எங்கள் பள்ளியில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகம், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளோம். இந்தப் பரிசு எங்களை மேலும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது" என்றார்.
No comments:
Post a Comment