Latest News

  

மாறுதலாகிச் செல்லும் பத்திரப் பதிவு அதிகாரி வீட்டில் திடீர் சோதனை; 34 தங்கக் காசுகள், ரூ.3.20 லட்சம் பறிமுதல்

சேலத்தில், பணியிட மாறுதலாகிச் செல்லும் பத்திரப் பதிவுத்துறை சேலம் மண்டல துணைத் தலைவர் ஆனந்த் என்பவரது வீட்டில் இருந்து ரூ.3.20 லட்சம் ரொக்கம், 34 சவரன் தங்கக் காசுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பத்திரப் பதிவுத்துறையின் சேலம் மண்டல துணைத் தலைவராக பணியாற்றி வந்த வி.ஆனந்த் என்பவர், கடலூருக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் 70 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில், மண்டல துணைத் தலைவராக இருந்த ஆனந்த், தனது பணியிட மாறுதலையடுத்து, நேற்று (அக். 31) சேலம் ஃபேர்லேண்ட்ஸ்-ல் உள்ள அவரது வீட்டில் பிரிவு உபசார விழா நடத்தியுள்ளார். அந்த விருந்தில், பத்திரப்பதிவுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு, ஆனந்த்துக்கு தங்க ஆபரணங்கள், ரொக்கம் என பல லட்சம் மதிப்புக்கு பரிசுகளை வழங்கியதாக, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி, சந்திரமவுலி தலைமையிலான போலீஸார், இன்று (நவ. 1) காலை 6 மணியளவில் சேலம் ஃபேர்லேண்ட்ஸ்-ல் உள்ள ஆனந்த்தின் இல்லத்துக்கு திடீரென சென்று, சோதனையில் ஈடுபட்டனர்.

மாலை வரை நீடித்த சோதனையில், மொத்தம் சுமார் ரூ.13 லட்சம் மதிப்புக்கு ஒரு சவரன் எடை கொண்ட 34 தங்கக் காசுகள், ரொக்கம் ரூ.3.20 லட்சம், சிறிய தங்க மோதிரங்கள் உள்ளிட்ட ஆபரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, பத்திரப்பதிவுத் துறை மண்டல துணைத் தலைவர் ஆனந்த் மீது, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலத்தில் கடந்த வாரத்தில், சூரமங்கலம் சார் பதிவாளர் அலுவலகம், சில தினங்களுக்கு சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை நடத்திய நிலையில், தற்போது பத்திரப் பதிவுத்துறை மண்டல துணைத் தலைவர் வீட்டிலும் சோதனை நடத்தியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source : www.hindutamil.in

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.