அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பாரா, இல்லையா என்பதை அந்த நாட்டு மக்கள் வரும் நவம்பர் 3ஆம் தேதி தீர்மானிக்க உள்ளனர்.
குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்பை எதிர்த்து, வரவிருக்கும் தேர்தலில் களம் காண்கிறார் ஜோ பைடன். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில், துணை அதிபராக இருந்தவராக இவர் அறியப்பட்டாலும், உண்மையில் பைடன் 1970களிலிருந்தே அமெரிக்க அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் கருத்துக்கணிப்பு நிறுவனங்கள், மக்கள் எந்த வேட்பாளரை விரும்புகிறார்கள் என்று கேட்டு நாட்டின் மனநிலையை அறிய முயற்சிக்கும்.
அதுபோன்ற கருத்துக்கணிப்புகளின் விவரங்களை தெரிந்துகொள்வது மட்டுமின்றி, யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து அவர்கள் சொல்ல கூடிய, சொல்ல முடியாத விடயங்களை இங்கே பார்ப்போம்.
தேசிய அளவில் யாருக்கு ஆதரவு?
ஒட்டுமொத்தமாக, நாடு முழுவதும் ஒரு வேட்பாளர் எவ்வளவு பிரபலமானவர் என்பதற்கு தேசிய அளவிலான கருத்துக்கணிப்புகள் ஒரு நல்ல வழிகாட்டி. ஆனால் அவை தேர்தலின் முடிவைக் கணிக்கும் வழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
உதாரணமாக, 2016ஆம் ஆண்டில், தேர்தலில் முன்னிலை வகித்த ஹிலாரி கிளிண்டன், டொனால்டு டிரம்பை விட கிட்டத்தட்ட மூன்று மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்றார். ஆனாலும் அவர் தேர்தலில் வெற்றிபெறவில்லை. ஏனென்றால், அமெரிக்கா 'எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் எனப்படும் வாக்காளர் தொகுதிகள் முறையைப் பின்பற்றுகிறது. எனவே, அதிக வாக்குகளைப் பெறுவது என்பது எப்போதும் தேர்தலில் வெற்றியை நிர்ணயிப்பதல்ல.
இதையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு பார்த்தோமானால், இந்த ஆண்டின் தொடக்கம் முதலே பெரும்பாலான நேரங்களில் ஜோ பைடனே முன்னிலையில் நீடிக்கிறார். குறிப்பாக, சமீபத்திய வாரங்களில் தேசிய அளவில் அவரது ஆதரவு 50 சதவீதத்தை ஒட்டியே உள்ளது.
எந்தெந்த மாகாணங்கள் வெற்றியை நிர்ணயிக்கும்?
அமெரிக்க அதிபர் தேர்தலை பொருத்தவரை, ஒரு வேட்பாளர் அதிக வாக்குகளை பெறுவதை விட அதை எங்கு பெறுகிறார் என்பதே முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டனின் பெற்ற அனுபவம் உணர்த்தியுள்ளது.
பெரும்பாலான மாகாணங்கள் கிட்டத்தட்ட எப்போதுமே ஒரே மாதிரியாக வாக்களிக்கின்றன, அதாவது ஒரு சில மாகாணங்கள் மட்டுமே இரு வேட்பாளர்களும் வெற்றிபெற வாய்ப்புள்ளவையாக உள்ளன. தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் இந்த மாகாணங்களே 'போர்க்கள மாகாணங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
'எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் எனப்படும் வாக்காளர் தொகுதிகள் எத்தனையை ஒருவர் கைப்பற்றுகிறார் என்பதை வைத்தே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒவ்வொரு மாகாணமும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குறிப்பிட்ட எலக்டோரல் காலேஜ் வாக்குகளைப் பெற்றிருக்கும். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில், 270 அல்லது அதற்கும் மேலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்தான் வெற்றியாளர்.
மேற்குறிப்பிட்ட வரைப்படத்தில் உள்ளபடி, ஒரு சில மாகாணங்களில் மற்ற மாகாணங்களை விட மிக அதிகளவிலான எலக்டோரல் காலேஜ்கள் உள்ளதால், வேட்பாளர்கள் அவற்றில் ஒப்பீட்டளவில் அதிக காலம் பிரசாரம் செய்கிறார்கள்.
வெற்றியை நிர்ணயிக்கும் மாகாணங்களில் முன்னணியில் இருப்பது யார்?
தற்போதைய சூழ்நிலையில், போர்க்கள மாகாணங்களில் ஜோ பைடனுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால், இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது, குறிப்பாக டொனால்டு டிரம்ப் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் களநிலவரம் குறுகிய காலத்திலேயே மாறக்கூடும்.
மிஷிகன், பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் பைடன் வலுவான முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தொழில்துறைகள் நிறைந்த இதே மூன்று மாகாணங்களில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருந்தார்.
அதே சமயத்தில் டிரம்ப், கடந்த 2016ஆம் ஆண்டு அதிக வாக்கு வித்தியாசத்தில், அதாவது 8-10 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற போர்க்கள மாகாணங்களான ஓஹியோ, டெக்சாஸ் மற்றும் லோவா உள்ளிட்டவற்றில் அவரது தற்போதைய வெற்றிவாய்ப்பு மோசமான நிலையில் உள்ளதால், அவரது பிரசார குழுவினரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மூன்று மாகாணங்களிலும் தற்போது பைடனின் கையே ஓங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த களநிலவரத்துக்கு வலுசேர்க்கும் வகையில், இதுதொடர்பான கருத்துக் கணிப்புகளை வழக்கம்போலவே "போலியானவை" என்று விமர்சித்த டிரம்ப், கடந்த ஜூலை மாதம் தனது பிரசார குழுவின் மேலாளரை மாற்றினார்.
ஆனால், இவற்றை மட்டும் காரணமாக கொண்டு இறுதி முடிவுக்கு வந்துவிட முடியாது. டிரம்ப் தனது பதவியை தக்கவைப்பதற்கான வாய்ப்பு இன்னமும் இருக்கவே செய்கின்றன.
கொரோனா வைரஸ் விவகாரம் டிரம்ப்பின் வெற்றிவாய்ப்பை குறைத்துள்ளதா?
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அமெரிக்காவில் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஒருமித்த ஆதரவோ, எதிர்ப்போ இல்லாத கலவையான சூழ்நிலை நிலவுகிறது.
மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை தேசிய அவசரநிலையாக அறிவித்து, வைரஸ் பரவுவதைத் தடுக்க 50 பில்லியன் டாலர்களை மாகாண அரசுகளுக்கு வழங்கியதன் மூலம் டிரம்பின் அணுகுமுறைக்கு ஆதரவு அதிகரித்தது. இந்த கட்டத்தில், 55% அமெரிக்கர்கள் அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாக முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனமான இப்சோஸ் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் ஜனநாயக கட்சியினரிடமிருந்து அவருக்கு கிடைத்த ஆதரவு அதன்பிறகு மறைந்துவிட்டது, குடியரசு கட்சியினர், தொடர்ந்து தங்கள் அதிபரை ஆதரித்தனர்.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்குப்பகுதியிலுள்ள நகரங்களில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளதால் டிரம்பின் நடவடிக்கைகள் குறித்து அவரது ஆதரவாளர்களே கேள்வியெழுப்ப தொடங்கிவிட்டதாக மிக சமீபத்தில் வெளியான தரவுகள் குறிப்பிடுகின்றன. அதாவது, ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் குடியரசு கட்சிக்கான ஆதரவு 78 சதவீதமாக குறைந்துள்ளது.
இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் குறித்த விவகாரத்தில் டிரம்பின் நிலைப்பாட்டில் சமீபகாலமாக உற்சாகம் குறைந்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது.
மேலும், நோய்த்தொற்று பரவத் தொடங்கி பல மாதங்கள் ஆன நிலையில், சமீபத்தில் முதன்முறையாக முகக்கவசம் அணிய தொடங்கிய டிரம்ப், அமெரிக்கர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்திருந்தார். மேலும், முகக்கவசங்கள் நோய்த்தொற்று பரவலில் "ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்" என்றும் அது "தேசபக்தியை" காட்டுவதாகவும் கூறினார்.
வாஷிங்டன் பல்கலைக்கழக வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆய்வு மாதிரி, தேர்தல் நாளில் அமெரிக்காவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 250,000ஐ கடந்திருக்கும் என்று கணித்துள்ளது.
கருத்துக்கணிப்புகளை நம்ப முடியுமா?
2016ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை எடுத்துக்காட்டாக கொண்டு ஒட்டுமொத்தமாக கருத்துக்கணிப்புகள் தவறானவை என்று எளிதில் கூறி விட முடியும், இதையே டிரம்பும் அடிக்கடி செய்கிறார். ஆனால், இது முற்றிலும் உண்மையில்லை.
பெரும்பாலான தேசிய அளவிலான கருத்துக்கணிப்புகளில் ஹிலாரி கிளிண்டன் ஒருசில சதவீத வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இருப்பினும், அவை தவறானவை என்று கருத முடியாது. ஏனெனில் அவர் தனது போட்டியாளரை விட மூன்று மில்லியன் வாக்குகள் அதிகமாக வென்றார்.
2016ஆம் ஆண்டு தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் ஒரு சில தடுமாற்றங்கள் இருக்கவே செய்தன. அதாவது, கருத்துக்கணிப்பு நிறுவனங்கள், பட்டப்படிப்பு இல்லாத வாக்காளர்களின் எண்ணவோட்டத்தை சரிவர வெளிப்படுத்த தவறின. இதனால், சில போர்க்கள மாகாணங்களில் டிரம்புக்கு இருந்த ஆதரவு தேர்தல் முடிவுகள் வரும் வரை வெளிப்படவில்லை. இந்த பிரச்சனையை தற்போது பெரும்பாலான கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் சரிசெய்துவிட்டன.
ஆனால், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக, முன்னெப்போதுமில்லாத வகையில் வரவிருக்கும் தேர்தலில் நிச்சயமற்றத்தன்மை நிலவுகிறது. இந்த விவகாரம் மக்களின் தனிப்பட்ட உடல்நலன் மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை செலுத்துவது தேர்தலில் எதிரொலிக்கக் கூடும். மேலும், தேர்தல் நடப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே வெளியாகும் இந்த கருத்துக்கணிப்புகளை எச்சரிக்கையுடனே அணுக வேண்டும்.

No comments:
Post a Comment