கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட உத்தரவுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே மறுதிறப்புக்கான நடவடிக்கைகள்:
கரோனா பரவலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவுகள், தளர்த்தப்பட்டு வருவதால், கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே கிட்டதட்ட அனைத்து நடவடிக்கைகளும், படிப்படியாக தொடங்கியுள்ளன.
பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகளவில் கூடும் சில நடவடிக்கைகளுக்கு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக சில கட்டுப்பாடுகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில், வணிக வளாகம், ஹோட்டல், உணவு விடுதிகள், வழிபாட்டு தலங்கள், யோகா மற்றும் உடற்பயிற்சி மையங்கள், சினிமா அரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவை இதில் அடங்கும்.
கோவிட் பாதிப்பு வாய்ப்பு அதிகம் உள்ள சில நடவடிக்கைகளில், நிலைமைக்கேற்ப மறுதிறப்பு குறித்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளே முடிவு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள் 100க்கும் மேற்பட்டவர்களை அனுபதிப்பது போன்றவை இதில் அடங்கும்.
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்குப்பின், கீழ்கண்ட நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டன.
1. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கிய சர்வதேச பயணிகளின் விமான போக்குவரத்து.
2. விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு நீச்சல் குளங்களை திறப்பது.
3. வர்த்தக நிறுவனங்களுக்கான கண்காட்சிகள்.
4. 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறப்பது.
5. சமூக/கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு/கலாச்சார, மத நிகழ்ச்சிகளில் அரங்கத்தின் கொள்ளவில் 50 சதவீதம் மற்றும் 200 பேர் உச்சவரம்புடன் கலந்து கொள்ள அனுமதி.
மேற்கண்ட நடவடிக்கைகளில், கூடுதல் நடவடிக்கைகளை நிலைமைக்கேற்ப எடுக்கலாம்.
கோவிட் சரியான நடத்தைமுறை:
பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்காகத்தான், படிப்படியான மறுதிறப்பு அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், இதன் மூலம் தொற்று முடிந்து விட்டதாக அர்த்தம் அல்ல. கரோனாவுக்கு ஏற்ற நடவடிக்கைகளை மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டியது அவசியம். இதற்காகத்தான் முறையாக முக கவசம் அணியுங்கள்; அடிக்கடி கை கழுவுங்கள்; 6 அடி தூரத்தை பராமரியுங்கள்; என்ற 3 மந்திரங்களுடன் மக்கள் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி தொடங்கினார்.
பணிகளை வெற்றிகரமாக மீண்டும் தொடங்க வேண்டும், அதே நேரத்தில் கோவிட் மேலாண்மை நெறிமுறைகள் நீர்த்து போகக் கூடாது என்ற உணர்வை மக்கள் இடையே ஏற்படுத்துவது அவசியம்.
முக கவசம் அணிய வேண்டும், கை கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோவிட்-19-க்கு ஏற்ற நடவடிக்கைகளை மக்களிடம் ஊக்குவிக்க முயற்சிக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.
கோவிட்-19 மேலாண்மைக்கான தேசியளவிலான உத்தரவுகள்
கோவிட்-19 மேலாண்மைக்கான தேசியளவிலான உத்தரவுகள், நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டும்.
கட்டுப்பாடு மண்டலங்களில், நவம்பர் 30-ம் தேதி வரை, முடக்க கால விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
கட்டுப்பாடு மண்டலங்களில் நவம்பர் 30-ம் தேதி வரை முடக்கம் தொடர்ந்து இருக்கும்.
கட்டுப்பாட்டு மண்டலங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநிலங்கள் தங்கள் இணையதளங்களில் தெரிவித்து, அதை மத்திய சுகாதாரத்துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே மாநிலங்கள் எந்த உள்ளூர் முடக்கத்தையும் அமல்படுத்தக் கூடாது.
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
ஆரோக்ய சேது செயலி பயன்பாடு:
ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment