
"இந்தியாவில் மநு ஸ்மிரிதிதான் சமூக - கலாசார தளங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
மநு ஸ்மிரிதியில் பெண்கள் தொடர்பாக இடம்பெற்றதாக கூறப்படும் சில விஷயங்கள் குறித்து டாக்டர் அம்பேத்கர் பேசிய உரைகளை மேற்கோள்காட்டி தொல். திருமாவளவன் சமீபத்தில் காணொளியொன்றில் பேசியிருந்தார். அவர் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவருக்கு எதிரான போராட்டங்களை பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் முன்னெடுத்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சையின் பின்னணியை அறிய தொல். திருமாவளவனை பிபிசி தமிழ் சந்தித்தது. அவர் அளித்த நேர்காணலில் இருந்து.
கே. நீங்கள் ஒரு கூட்டத்தில் பெண்களை இழிவுபடுத்தியதாக கூறப்படும் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேச்சின் பின்னணி என்ன?
ப. இது பல நாட்களாக பல தலைவர்களால் பேசப்பட்ட ஒன்றுதான். ஐரோப்பிய பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 24ஆம் தேதி, இணைய வழிக் கருத்தரங்கு ஒன்றை நடத்தினார்கள். அதில் இரண்டாவது அமர்வில் நான் பெரியாரை பற்றிப் பேசினேன். அப்படிப் பெரியாரை பற்றிப் பேசும்போது, மநு ஸ்மிரிதியையும் பற்றிப் பேசித்தான் ஆக வேண்டும். அவரது முழு பொது வாழ்க்கையும் மநு ஸ்மிரிதியை அம்பலப்படுத்துவதாகவே இருந்தது.
ஆகவே, நான் மநு தர்மத்தில் பெண்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள், அப்படி ஒடுக்கப்படுவதால்தான் ஒட்டுமொத்த சமூகமும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது; இன்றைய சமூகக் கட்டமைப்பே, மநு ஸ்மிரிதியால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புதான் என்று குறிப்பிட்டேன். மநு தர்மம் எப்படி பெண்களை நடத்துகிறது என்பதை விளக்கிப் பேசினேன். அதை வைத்துக்கொண்டு நான் இந்து பெண்களை கொச்சைப்படுத்துகிறேன் என அவர்கள் அவதூறு பரப்புகிறார்கள். முழுப் பேச்சையும் கேட்காமல், ஒரு நிமிடப் பேச்சை எடுத்துக் கொண்டு முன்னும் பின்னும் ஒட்டி திட்டமிட்டு பரப்புகிறார்கள். இதற்குக் காரணம், தமிழ்நாட்டில் இன்னும் ஐந்தாறு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வருகிறது. அப்போது தி.மு.க கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்கள்.
கே. மநு தர்மம் பற்றி இப்போது பேச வேண்டிய தேவை ஏன்? இந்த காலகட்டத்திற்கு எந்தப் பொருத்தமும் இல்லாத ஒரு நூலை பேசியிருப்பது ஏன் என்ற விமர்சனமும் உங்கள் மீது முன்வைக்கப்படுகிறதே...
ப. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் மநு ஸ்மிரிதியை அறிந்தும் அறியாமலும் கடைப்பிடிக்கக்கூடிய நிலைதான் இருக்கிறது. ஒவ்வொரு உறவுகளும் மனு ஸ்மிரிதி அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன. கலாசார நிகழ்வுகள் அனைத்தும் மநு ஸ்மிரிதி அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சாதியும் தங்கள் வழக்கம், பரம்பரை வழக்கம் என சொல்வதெல்லாம் மநு தர்மம் போதித்ததுதான்.
சாதி மறுப்புத் திருமணம் நடந்தால், அவன் சூத்திரனாக இருந்தால் கொலை செய்யப்பட வேண்டும் என்கிறது மநு தர்மம். அதனால்தான் இங்கே ஆணவக் கொலை நடக்கிறது. ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் வரலாம் என்பதற்குக் கடுமையாக எதிர்ப்பு வருகிறதென்றால் அதற்குக் காரணமும் மநு ஸ்மிரிதிதான். இத்தனை ஆண்டுகளாக பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. சூத்திரர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. பஞ்சமர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இப்படி கல்வி மறுக்கப்பட்டதற்குக் காரணம் மநு ஸ்மிரிதிதான். கோயில்களில் கர்ப்பகிரகத்திற்குள் பிராமணர்கள் மட்டும்தான் இருக்க முடிகிறது. கருவறைகளுக்குள் பிராமணர்களைத் தவிர வேறு யாரும் செல்லக்கூடாது என நிலை நிறுத்தியது மநு ஸ்மிரிதிதான். கிராமங்களிலும் நகரங்களிலும் தனித்தனி வாழ்விடங்கள் என்ற அமைப்பு ஏற்பட்டதற்கு காரணம் மநு ஸ்மிரிதிதான்.
திருமணங்கள் என எடுத்துக்கொண்டால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான திருமண முறை கிடையாது. பிரமணர்களுக்கு, சூத்திரர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு என வெவ்வேறு திருமண முறைகள் இருக்கின்றன. இந்துக்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான திருமண முறை கிடையாது. குலத்திற்கு ஒரு நீதி,குலத்திற்கு ஒரு வழக்கம் என நடைமுறைக்கு வந்ததே இப்படித்தான். அப்படியிருக்கும்போது மநு தர்மத்திற்கு இப்போது எந்த அர்த்தமோ, காலப்பொருத்தமோ இல்லை என எப்படிச் சொல்ல முடியும்?
நம்முடை சமூகத்தில், கலாசாரத்தில் ஆட்சி நடத்துவதே மநு ஸ்மிரிதிதான். அரசியலில் மட்டும்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் செயல்படுகிறது. இப்போது மநு தர்மத்திற்கு எவ்விதப் பொருத்தமுமில்லையென சொல்வது மோசடி. ஒன்று அறியாமையில் அப்படிச் சொல்ல வேண்டும். அல்லது வேண்டுமென்றே சொல்ல வேண்டும். இந்தியா முழுவதும் நாட்டை ஆளுவது, கலாசார தளம் ,சமூக தளம், பொருளாதார தளம் ஆகியவற்றில் மநு ஸ்மிரிதிதான் உள்ளது. ஆகவே முன்னெப்போதையும் விட, இப்போதுதான் அதைப் பற்றி பேசுவது பொருத்தமானது.
கே. நீங்கள் எடுத்துப் பேசுவது மனு ஸ்மிரிதியின் எந்தப் பிரதி? ஏனென்றால் 1794ல் வில்லியம் ஜோன்ஸ் மொழிபெயர்த்த மநு ஸ்மிருதி, நிறைய பிற்சேர்க்கைகள் இருப்பதால் நிராகரிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. நீங்கள் எந்தப் பிரதியை முன்வைத்து உங்கள் விமர்சனங்களை முன்வைக்கிறீர்கள்?
ப. இந்திய கலாசார அமைச்சகம் அவர்களுடைய இணைய தளத்திலேயே மநு ஸ்மிரிதியை வெளியிட்டிருக்கிறது. மநு ஸ்மிரிதிக்கு எந்த காலப்பொருத்தமும் இல்லை என்றால், அதை ஏன் இணைய தளத்தில் அரசே வெளியிட்டிருக்கிறது? பென்குயின் ஒரு மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் 9வது அத்தியாயத்தில் சொல்லியிருப்பதுதான் இது. தவிர, மநு ஸ்மிரிதியை கிறிஸ்தவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள், தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்றால் அதை தடை செய்ய வேண்டியதுதானே? எது சரியான பதிப்போ, அதை அரசு அறிவிக்கட்டும். இன்று அரசியல் சாசனம் நடைமுறையில் இருக்கும்போது, மனு ஸ்மிரிதி தேவையில்லை என்றால் அதை அரசு தடை செய்யட்டும்.
கே. நீங்கள் தொடர்ச்சியாக இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறீர்கள், மற்ற மதங்கள் மீது இம்மாதிரி விமர்சனங்களை வைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே...
ப. என்னை இழிவுபடுத்துவது இந்து மதம்தான். நான் கிறிஸ்துவன் அல்ல. நான் ஏன் கிறிஸ்தவ மதத்தைப் பற்றிப் பேச வேண்டும்? நான் இஸ்லாமியன் அல்ல. எனக்கு அந்த மதத்தைப் பற்றி என்ன தெரியும்? நான் கிறிஸ்தவனாக இல்லாதபோது, இஸ்லாமியராக இல்லாத போது, சமணராக இல்லாதபோது, சீக்கியராக இல்லாதபோது அந்த மதங்களைப் பற்றி பேச வேண்டிய தேவை எனக்கு இல்லை. என் வாழ்க்கை முறையில் என்னை இந்து என்கிறார்கள். என் சான்றிதழில் இந்து என்கிறார்கள். இந்த சமூகக் கட்டமைப்பின் மீது எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதற்குக் காரணம் மநு ஸ்மிரிதி எனத் தெரிகிறது. அதனால் மநு ஸ்மிரிதிதான் பெண்களை ஒடுக்குகிறது என்பதை மக்களிடம் சொல்கிறேன்.
கே. நீங்கள் மநு ஸ்மிரிதியை மட்டும் குறிப்பிடுகிறீர்கள்.ஆனால், அதே காலகட்டத்தில் எல்லா மத இலக்கியங்களும் புராணங்களும் பிற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருக்கத்தானே செய்தன...
ப. எந்த மதத்தோடு எனக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறதோ, அந்த மதத்தைப் பற்றித்தான் நான் பேச முடியும். உலகில் ஆயிரம் மதங்கள் இருக்கின்றன. எல்லா மதங்களையும் ஒப்பிட்டுப் பேச நான் ஒன்றும் ஆய்வாளர் அல்ல. நான் தினமும் சமூகம் சந்திக்கக்கூடிய, மகளிர் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை பார்க்கிறேன். இதைத்தான் அம்பேத்கர் பார்த்தார். இதைத்தான் பெரியார் பார்த்தார். அம்பேத்கர் நூல்களில் மூன்றாவது பகுதியில் Women And Counter Revolution என்ற தலைப்பில், மநு ஸ்மிரிதி பெண்களைப் பற்றி பேசுவது குறித்து எழுதியிருக்கிறார். இதை இந்திய அரசுதான் வெளியிட்டிருக்கிறது.
கே. இந்த சர்ச்சை தேர்தல் களத்தில் எப்படி எதிரொலிக்கும் என நினைக்கிறீர்கள்?
ப. தேர்தல் களத்தில் ஆதாயம் தேட அவர்கள் நினைக்கிறார்கள். அந்தக் கனவு பலிக்காது. பெண்கள் எல்லாவற்றையும் உணரத் தொடங்கிவிட்டார்கள். யார் உண்மை பேசுகிறார்கள் என அவர்களுக்குத் தெரியும். ஆனால், பாஜகவினர் வெறும் வேல் மற்றும் சூலத்தை கையில் கொடுத்து மத வெறியைத் தூண்டுகிறார்கள். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நிற்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டு, கையில் சூலத்தைக் கொடுத்து, நீ இந்து, உன் மதத்தை இழிவுபடுத்துபவர்களை விடாதே என்கிறார்கள். ஆகவே, தேர்தல் களத்தில் இந்தப் பிரச்சனை அவர்களுக்கு சாதகமாக இருக்காது.
கே. இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எடுத்துச் செல்கிறீர்களே. இந்த விவகாரம் உங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு நெருக்கடியைக் கொடுக்கக்கூடும் என பேசப்படுவதை அறிவீர்களா?
ப. கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் இந்தக் கருத்தில் உடன்பாடு உள்ளவைதான். அவற்றில் உள்ளவர்கள், மநு தர்மத்தால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்தரவர்கள்தான். இந்த விவகாரத்தை நிச்சயமாக நெருக்கடியாக உணர மாட்டார்கள். அப்படி நெருக்கடியாக அவர்கள் நினைத்தால், அவர்களுக்கு நெருக்கடி ஏற்படாத வகையில் எப்படி கையாள வேண்டுமோ அப்படி கையாளுவேன்.
No comments:
Post a Comment