Latest News

  

மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுவதற்கு AICTE காரணமா?" - ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி!

திருச்சி மாவட்டம் கிருஷ்ணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 17.07.2020 அன்று உயர்நீதிமன்ற உத்தரவின்படி அரசு, தனியார் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணத்தை வசூலிக்கலாம். மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை வசூல் செய்த போதிலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை.

கொரோனா ஊரடங்கு காலத்தில் சில மாதங்கள் ஊதியம் வழங்கி இருந்தாலும், பல மாதங்கள் வழங்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுகுறித்து புகார்களை விசாரிக்க ஒரு இணையதள முகவரி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் புகார் அளித்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 461 பொறியியல் கல்லூரிகளுக்காக இந்த சேர்க்கை நடைபெறுகிறது. இதில் 90 சதவீத கல்லூரிகள் தனியார் கல்லூரிகள். ஆனால் கொரோனா காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஊதியம் வழங்கப்படவில்லை.

ஆகவே தமிழகத்தில் உள்ள தமிழகத்தில் உள்ள தனியார், சுயநிதி பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா காலத்தில் உரிய முறையில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். அதுவரை தற்போதைய பொறியியல் சேர்க்கைக்கான, கலந்தாய்வை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தனியார் கல்லூரி ஆசிரியர்கள் பல மாதங்களாக ஊதியம் இன்றி மிகவும் சிரமத்தில் உள்ளனர் பலர் பிரியாணி கடைகளிலும் ஹோட்டல்களிலும் பணியாற்றி வருகின்றனர். எனவே அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறினார்.

அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதற்கு யார் காரணம்? மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுவதற்கு அனுமதி வழங்கிய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்தான் காரணமா?

மேலும் தற்போது தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை. பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாகின்றனர் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் இதுபோன்ற பிரச்சினைகளை களைய வேண்டும். தேவைக்கேற்ப மட்டுமே கல்லூரிகளை தொடங்கவேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், வழக்கில் தனியார், பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கத்தையும் எதிர்மனுதாரராக சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.