
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வடிகால் வசதியின்றி சிமென்ட் சாலை அமைத்ததால் வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது. இதைக் கண்டித்து மானாமதுரை ஒன்றிய அலுவலகத்தில் சமையல் செய்து பாதிக்கப்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
மானாமதுரை அருகே சூரக்குளம் பில்லறுத்தான் ஊராட்சி அழகுநாச்சிபுரத்தில் சமீபத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் போதிய வடிகால் வசதி அமைக்கவில்லை. இந்நிலையில் சில நாட்களாக தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருகிறது. வடிகால் வசதி இல்லாததால் சிலரது வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது.
இதனால் அவர்களது கோழிகள், வாத்துகள் நீரில் மூழ்கி இறந்தன. மேலும் வீடுகளும் இடியும் நிலையில் உள்ளன. இதையடுத்து போதிய வடிகால் வசதி அமைத்து மழைநீரை வெளியேற்ற வேண்டுமென, பாதிக்கப்பட்டோர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.
நடவடிக்கை இல்லாத நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏ தங்கமணி, நகரச் செயலாளர் நாகராஜன் தலைமையில் பாதிக்கப்பட்டோர் ஆடுகள், சமையல் பாத்திரங்களுடன் மானாமதுரை ஒன்றிய அலுவலகத்திற்கு குடிபுகுந்தனர். பிறகு வட்டார வளர்ச்சி அலுவலர் அறை முன்பாக சமையல் செய்தனர்.
இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமகாலிங்கம் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். அலுவலகத்திற்கு புகுந்து சமையல் செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment