
சென்னை: 7.5% இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மிக கடுமையாக சாடியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
பாமக நிறுவனர் ஆளுநரை இடைவிடாமல் தாக்கி வருகிறார். குறிப்பாக 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரை கடுமையாக தாக்குவதும் ஆளுநர் பதவியே தேவை இல்லை என்பதும் ராமதாஸின் நிலைப்பாடு.
இன்றும் தமது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டிருப்பதாவது: 7.5% இட ஒதுக்கீடு சட்டம் குறித்து தொடர் அழுத்தங்கள் கொடுத்தும் ஆளுனர் இன்னும் கையெழுத்திடவில்லை. ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை என்ற அண்ணாவின் வார்த்தைகள் மிகவும் சரியானவை என்பதை இது உறுதி செய்கிறது! 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு தமிழக ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏன்? இதற்கான இளைஞர்களின் பதில்களை நான் எதிர்பார்க்கிறேன்!
தமிழ்நாட்டில் 59 அணைகள் உட்பட 736 அணைகளை ரூ.10,000 கோடியில் மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. உலகில் அதிக அணைகள் உள்ள மூன்றாவது நாடான இந்தியாவில் அணைகள் மேம்படுத்தப்படுவது பாசன வசதியை பரவலாக்கும்!
நீர் மேலாண்மை சிறப்பாக அமைய வேண்டும்; அனைத்து பெரிய ஆறுகளிலும் 5 கி.மீக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதைத் தான் சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் கடந்த 30 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது! இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
source: oneindia.com
No comments:
Post a Comment