
காந்தி 5 முறை மதுரை வந்துள்ளதாக நேற்று காந்திஜெயந்தி விழாவில் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.
காந்தியடிகளின் 152 வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மதுரை மேலமாசி வீதி கதர் விற்பனை நிலையத்தில் காந்தியடிகளின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து கதர்விற்பனையினை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் வினய், ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் எஸ் சரவணன், பெரியபுள்ளான் என்ற செல்வம்,கே. மாணிக்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் உதயகுமார் பேசியதாவது;
மகாத்மா காந்தி 20 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். இதில் 5 முறை மதுரைக்கு வந்துள்ளார். 22.9.1921 அன்று இதேமதுரையில் தனது முழு ஆடையை துறந்து அரை ஆடையை மேற்கொண்டார்
2119 நாட்கள் நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரால் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மகாத்மா காந்தி உயிர் பிரியும் போது அவர் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த ஆடை, சால்வை, மூக்கு கண்ணாடி ,கதர் துணி ,கைக்குட்டை உள்ளிட்ட 14 பொருட்கள் மதுரை காந்தி மியூசியத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தை 12கோடி மதிப்பில் ஜெயலலிதா புதுப்பித்து தந்தார். மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் மூலம் தமிழகம் முதலிடத்தில் திகழ்ந்து 13 தேசிய விருதுகளை பெற்று உள்ளது. கதர் ஆடையை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக அரசு அனைத்து கதர் ஆடைகளுக்கும் 30% தள்ளுபடி வழங்கியுள்ளது. கரோனா காலத்தில் நெசவாளர்களை காத்திடும் வண்ணம் நல வாரியத்தில் உள்ள 1,03,343 நெசவாளர்களுக்கு 2,000 ரூபாய் உதவித்தொகையை முதலமைச்சர் வழங்கி உள்ளார்.
தேசத்தந்தை மகாத்மா காந்தி தனிமனித ஒழுக்கத்துடன், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினார். சொல்லுவதை விட செயல் வடிவத்தில் காட்டினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment