Latest News

  

கேரள மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் அமலாக்கப் பிரிவினரால் பெங்களூருவில் கைது: 4 நாள் விசாரணைக் காவல்

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறி, போதை மருந்து கடத்தல் வழக்கில் சட்டவிரோதப் பணிப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கப் பிரிவினரால் இன்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவில் கடந்த இரு மாதங்களுக்கு முன் போதை மருந்து கடத்தியதாக அனூப், அனிகா, ரவிந்திரன் ஆகியோரை தேசிய போதைமருந்து தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 145 எம்எம்டிஏ போதை மாத்திரைகளையும், ரூ.2.20 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த போதை மருந்துக் கடத்தல் கும்பலுக்கும், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தேசிய போதை மருந்துத் தடுப்புப் பிரிவினருக்குத் தெரியவந்தது. இந்தக் கும்பலுக்குத் தேவையான நிதியுதவியை பினீஷ் கொடியேறி செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

கொடியேறி பாலகிருஷ்ணன்

தேசிய போதைமருந்து தடுப்புப் பிரிவினர் கிரிமினல் புகார் அளித்ததைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இது தொடர்பாக கடந்த மாதம் 9-ம் தேதி பினீஷ் கொடியேறிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கப் பிரிவினர், பெங்களூருவுக்கு பினிஷ் கொடியேறியை வரவழைத்து, ஏறக்குறைய 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

போதை மருந்து கடத்தல் கும்பலின் முக்கியக் குற்றவாளி அனூப்புக்கும், கேரளத் தங்கக் கடத்தல் கும்பலில் கைதாகியிருக்கும் சிலருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும், அனூப்பிடம், பினீஷ் கொடியேறி பலமுறை செல்போனில் பேசியுள்ள ஆதாரங்களையும் அமலாக்கப் பிரிவினர் எடுத்தனர். இதனால், தங்கக் கடத்தல் வழக்கிலும் பினீஷ் கொடியேறிக்குத் தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கப் பிரிவினர் சந்தேகப்பட்டனர்.

இதற்கிடையே இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் பிரிவு பொதுச் செயலாளர் பி.கே.பிரோஸ், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ''பெங்களூரு போதை மருந்து கடத்தலில் கைதாகியுள்ளவர்களுடன் பினீஷ் கொடியேறிக்குத் தொடர்பு உண்டு. கைதாகியுள்ள முக்கிய நபர் முகமது அனூப்புடன் சேர்ந்து பினீஷ் கொடியேறி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார்'' என்று குற்றம் சாட்டினார். இதனால் அமலாக்கப் பிரிவுக்குச் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, பெங்களூருவுக்கு இன்று விசாரணைக்கு வருமாறு அமலாக்கப் பிரிவினர் பினீஷ் கொடியேறிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதை ஏற்று பெங்களூரு சாந்தி நகரில் இருக்கும் அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு பினீஷ் கொடியேறி காலை 11 மணிக்குச் சென்றார்.

அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாகக் கூறி பினீஷ் கொடியேறியைக் கைது செய்தனர்.

இதையடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பினீஷ் கொடியேறியை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.