
சேலம் மாநகரில் பொழுதுபோக்குத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால் தவித்து வரும் பொதுமக்கள், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில், சேர்வராயன் மலையடிவாரத்தில் உள்ள அணைக்கட்டுகளைத் தேடிச் சென்று, உற்சாகமாகக் குளித்து மகிழ்கின்றனர்.
சேலம் மாநகராட்சி வளர்ச்சியடைந்த போதிலும், இங்கு பொழுதுபோக்கு அம்சங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதனால், திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பதில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததால், தமிழகத்திலேயே அதிக திரையரங்குகள் கொண்ட நகரமாக சேலம் இருந்தது. தற்போது, திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், சேலம் மக்களின் முக்கியப் பொழுதுபோக்கு இடங்கள் திரையரங்குகள்தான். இதனுடன், குழந்தைகளுடன் சென்று விளையாடி மகிழக்கூடிய இடமாக சேலம் அண்ணா பூங்கா, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஏற்காடு சுற்றுலாத் தலம் போன்றவையும் உள்ளன.
ஆனால், கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையினால் திரையரங்குகள் மூடப்பட்டு, பல மாதங்களாகிவிட்டன. குழந்தைகளின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருந்த சேலம் அண்ணா பூங்காவானது, புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுப் பல மாதங்களாகிவிட்டன. மேலும், குரும்பப்பட்டியில் உள்ள உயிரியல் பூங்காவும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையினால் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, ஞாயிறு விடுமுறையின்போது, சேலம் மக்கள் பலர், இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றில் ஏற்காடு புறப்பட்டனர். ஆனால், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இடமாக, ஏற்காடு இருந்தபோதிலும், சுற்றுலாத் தலம் என்ற அடிப்படையில், இ-பாஸ் இருப்பவர்கள் மட்டுமே, ஏற்காடு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால், இ-பாஸ் இன்றி ஏற்காடு புறப்பட்ட சேலம் மக்களில் பலர், போலீஸாரால் திருப்பி அனுப்பப்பட்டதால், விரக்தியடைந்தனர்.
பொழுதுபோக்கு இடங்கள் யாவும், செல்ல முடியாத இடங்களாகிவிட்டதால், சேலம் மக்கள் தவிப்படைந்துள்ளனர். இந்நிலையில், சேலத்தை ஒட்டி அமைந்துள்ள சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள ஓடைகளில் மழை காரணமாக, நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை அறிந்த சேலம் மக்களில் பலர், தற்போது நீரோடைகள், தடுப்பணைகள் ஆகியவற்றைத் தேடிச் சென்று குளித்து மகிழ்கின்றனர். விடுமுறை நாளான நேற்று, சேலம் கன்னங்குறிச்சி அருகே சேர்வராயன் அடிவாரத்தில் உள்ள கற்பகம் அணைக்கட்டில் பலர் குடும்பத்துடன் வந்து, ஓடை நீரில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், ''பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், குழந்தைகள் எந்நேரமும் வீட்டிலேயே இருக்கின்றனர். இதேபோல், கரோனா ஊரடங்கு காரணமாக, நாங்களும் கடந்த 6 மாதமாக வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்கிறோம். இந்தச் சூழலில், சேலத்தில் உள்ள சுற்றுலா இடங்களுக்குக் கூடச் செல்லத் தடை உள்ளது.
எனவே, வீட்டில் இருந்து உணவு, தின்பண்டங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, குழந்தைகளுடன் இதுபோன்ற நீர்நிலைகளுக்கு வந்து, உற்சாகமாகக் குளித்து, உணவைச் சாப்பிட்டுச் செல்வது, மனதுக்குப் புத்துணர்வை அளிக்கிறது. குழந்தைகளும் இதனால் மகிழ்ச்சியடைகின்றனர்'' என்றனர்.
No comments:
Post a Comment