
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், மாநில அளவிலான உயர்நிலைக் கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்தப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி தொடரப்பட்டுள்ள வழக்கில் இனி ஆண்டுதோறும் 2 முறை கூட்டம் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலின மற்றும் பழங்குடியினர் மீதான தீண்டாமையைத் தடுப்பதற்காக கடந்த 1989 ஆம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்ட வன்கொடுமைத் தடைச் சட்டத்தின் கீழ், மாநில அளவில் ஆண்டுக்கு இரு முறையும் மாவட்ட அளவில் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் கண்காணிப்புக் குழுவைக் கூட்ட வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் வன்கொடுமைத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசித்து மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் மார்ச் 31-ம் தேதிக்குள் அது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற கண்காணிப்புக் குழு கூட்டங்கள் சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என கோயம்புத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் டியம் டேய் சார்பில் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய மாநில அளவிலான உயர்நிலைக் கண்காணிப்புக் குழு கடந்த 2019-ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டு தமிழக முதல்வர் தலைமையில் கடந்த 8-ம் தேதி கூட்டம் நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. நிர்வாகக் காரணங்களால் உயர்நிலைக் கண்காணிப்புக் குழு கூட்டம் கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படாத போதிலும், தலைமைச் செயலாளர் தலைமையில், சமூக நலத்துறை மற்றும் மனித உரிமைப் பிரிவு ஏடிஜிபி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் முன்னிலையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதுதவிர ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால வரையறையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தி வருவதாகவும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கத் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் தேக்கம் குறைந்துள்ளதோடு அத்தகைய வழக்குகளில் தண்டனை விகிதம் அதிகரித்துள்ளது' எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், இனி ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், மாநில அளவிலான உயர்நிலைக் கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
No comments:
Post a Comment