
பெங்களூருவைச் சேர்ந்த 52 வயதாகும் பவர்லால் சுஜானி என்பவர், 18 மருத்துவமனைகளால் சிகிச்சை மறுக்கப்பட்ட பிறகு உயிரிழந்தார் என அவரின் சகோதரர் தினேஷ் தெரிவிக்கிறார்.
பவர்லால் சுஜானி உயிரிழந்த பிறகு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பவர்லால் இறப்பதற்கு முந்தைய நாள், எந்த வாகனமும் கிடைக்காத நிலையில், இருசக்கிர வாகனத்தில் தனது சகோதரரை உட்கார வைத்துக்கொண்டு, வீட்டிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் தினேஷ்.
"அவரின் பல்ஸ் 45-50 என்ற அளவில் மட்டுமே உள்ளது என்று அவர்களிடம் கூறினேன். அவர் தொடர்ந்து வாந்தி எடுத்து வருகிறார், அவரால் சரியாக சுவாசிக்க முடியவில்லை என்றேன். அவரை உள்ளே அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்த பிறகு, ஒரு பேப்பரில் ஆங்கிலத்தில் ஏதோ எழுதிவிட்டு, இவரை இங்கிருந்து அழைத்து சென்றுவிடுங்கள் என்றார்கள், " எனக்கூறி அழுத்தொடங்கினார் தினேஷ்.
அங்கிருந்து அருகாமையில் ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கிருந்து ஒரு ஆம்புலன்ஸில் சகோதரரை அழைத்துக்கொண்டு பல தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றார்.
"எங்களை வாசலிலேயே திருப்பி அனுப்பிவிட்டார்கள்." என்கிறார் அவர்.
இதுகுறித்து காவல்துறையில் புகார்கொடுக்கக்கூட அவர் தயாராக இல்லை. "இதுகுறித்து எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம்," என்று அழுதுகொண்டே கூறுகிறார் தினேஷ்.
இறந்த பவார்லாலிற்கு மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளார்கள். அதில் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது, அவரின் கடைசி மகனுக்கு 22 வயதாகிறது. இந்த குடும்பம் ஒரு சிறிய கடை அமைத்து துணி வியாபாரம் செய்துவருகிறது.
இந்தியா முழுவதும் இதே நிலை
கொரோனா தொற்றின் லேசான அறிகுறியோ அல்லது தீவிர அறிகுறியான மூச்சு திணறலோ எதுவாக இருந்தாலும் இம்மாதிரியாக மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்படும் முதல் நபர் இவர் இல்லை.
பொதுமுடக்கம் ஆரம்பம் ஆனது முதலே, இவ்வாறு மக்களுக்கு சிகிச்சை மறுக்கப்படுவது குறித்த செய்திகள், டெல்லி, மும்பை, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வரத்தொடங்கிவிட்டன.
கொரோனா வைரஸால் இறந்த முதல் இந்தியர், கொரோனா மட்டுமின்றி, இவ்வாறான சிகிச்சை மறுப்பையும் எதிர்கொண்டார். கர்நாடகாவிலுள்ள கல்புர்கியில் இருந்து, ஹைதராபாத் வரை பயணித்தும் அவரால் சிகிச்சை பெற முடியாமல் போனது.
இதற்கான காரணங்கள் என்ன?
சிகிச்சை மறுக்கப்படுவதற்கான காரணங்களில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. பவார்லாலின் சூழலில், மருத்துவமனையில் இருந்த அனைத்து கொரோனா வார்டும் நிறைந்துவிட்டது என்றும், ஒருவேளை அவரின் கொரோனா பரிசோதனை முடிவு எதிர்மறையாக வரும்பட்சத்தில் அவரை அந்த வார்டில் சேர்ப்பது சரியானது அல்ல என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
"நாங்கள் 45 படுக்கைகளை கோவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கியுள்ளோம். அவை அனைத்து ஏற்கனவே நிரம்பிவிட்டன. அவை அனைத்திலும் கொரோனா நோயாளிகள் இருப்பதால், நோய்தொற்று உறுதி ஆகாத ஒருவரை அங்கு வைக்க முடியாது. ஆகையால், கொரோனா தொற்று இருக்குமோ என்று சந்தேகப்படும் நோயாளிகளுக்கு வேறு மருத்துவமனையை கண்டறிய வேண்டும் என முடிவு செய்துள்ளோம்." என பிபிசியிடம் தெரிவித்தார் பகவான் மகாவீர் மருத்துவமனையின் அவசரசிகிச்சைப் பிரிவு நோடல் அதிகாரியான மருத்துவர் நிஷாந்த் ஹிரேமத்.
மருத்துவமனை பவார்லாலிற்கு சிகிச்சை அளிக்கவில்லை என்ற குடும்பத்தாரின் குற்றச்சாட்டை மறுக்கும் மருத்துவர் நிஷாந்த்,
"அவருக்கு செயற்கை சுவாசம் அளித்தோம். அவருக்கு தேவையான அடிப்படை உதவிகளையும் செய்தோம். அவர் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், அங்கு கொரோனாவிற்கான பரிசோதனையை செய்துகொள்ளுமாறு அவர் குடும்பத்திடம் தெரிவித்தோம். பரிசோதனை வசதி எங்களிடம் இல்லாததால், அவர்களை தனியார் மையங்களுக்கு அனுப்புகிறோம். பின் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுருத்துகிறோம்." என்கிறார் அவர்.
இதுகுறித்து பவார்லாலினின் இளைய மகன் தெரிவித்த கருத்து உள்ளூர் பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. அதில் அவர், "18 மருத்துவமனைகளுக்கு சென்றோம், அதைத்தவிர 32 மருத்துவமனைகளில் தொலைபேசி மூலமாக விசாரித்தோம். இங்கு அங்கு என இந்த நகரில் 120 கி.மீ பயணித்தோம்," என தெரிவித்துள்ளார். இம்மாதிரியான ஏதோ ஒரு மருத்துவமனையின் வாசலில்தான் அவர் தந்தையின் உயிர் பிரிந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள கர்நாடக அரசு, ஒன்பது மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2017 கர்நாடக பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் கர்நாடகாவின் தனியார் மருத்துவ நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி ஏன் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது.
"தனியார் மருத்துமனைகள், கோவிட் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கோ, நோய் அறிகுறி உள்ளவர்களுக்கோ சிகிச்சை மறுக்கக்கூடாது" என்கிறார் மாநில சுகாதாரத்துறை ஆணையர் பங்கஜ் குமார் பாண்டே.
இதுகுறித்து 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனைகள் பதிலளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தீர்வு என்ன?
கடந்த சில தினங்களில், கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேகமாக படுக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என அரசும் தனியார்த்துறையும் ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை ஒப்பிடுகையில், ஊரடங்கைப் பயன்படுத்தி, கர்நாடகத்தால் கொரோனா தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிந்துள்ளது.
கேரளாவிற்கு அடுத்த இடத்தில் கர்நாடகா உள்ளது.
மாநிலத்தில் ஜூன் 8ஆம் தேதி, 308 நோயாளிகள் என இருந்த கணக்கு ஜூலை 1ஆம் தேதி 1272 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரூவில் மட்டும், ஜூன் 8ஆம் தேதி 18 ஆக இருந்த எண்ணிக்கை ஜூலை 1ஆம் தேதி 732 ஆக உள்ளது.
"அரசின் பயன்பாட்டிற்காக, 7000-7500 படுக்கைகள் தனியார் மருத்துவமனைகளிலிருந்து கிடைக்கும். அப்படியென்றால், அடுத்து வரும் மாதங்களுக்கு அரசால் தயாராக இருக்க முடியும்." என்கிறார் எஃப்.எஹ்.ஏவின் அதிகாரியான மருத்துவர் எம்.சி.நாகேந்திர சாமி.
ஆனால், இதற்காக சரியான ஒரு வழிமுறை வேண்டும் என்கிறார், மருத்துவர் கிரிதர் பாபு.
பப்ளிக் ஹெல்த் பௌண்டேஷன் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த இவர், "நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக தொடங்கிய பிறகு, யாரை மருத்துவமனையில் வைத்து பார்க்க வேண்டும், யாரை தனிமைப்படுத்திக்கொள்ள சொல்ல வேண்டும் என நாம் பிரிக்க வேண்டும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு, லேசான அறிகுறி இருக்கும் பட்சத்தில் அவரால், தனி அறையில் தனிமைபடுத்திக்கொள்ள முடியும். அப்படி செய்ய முடியாதவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்கிறார்.
"மக்கள் நிறையபேர் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டால், மருத்துவமனையில் படுக்கைகள் கைவசம் இருக்கும். அதேபோல, படுக்கைகள் கையிறுப்பு குறித்து ஒரு அரசு தொலைபேசி எண் உருவாக்கினால், நோயாளிகள் ஒவ்வொரு மருத்துவமனையாக அலையவேண்டிய நிலை ஏற்படாது." என்கிறார் மருத்துவர் சாமி.
No comments:
Post a Comment