
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி 100% கட்டணத்தை செலுத்தும்படி வற்புறுத்திய 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முதல் தவணையாக 40 சதவீத கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதன்பிறகு இதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக பள்ளிக் கல்வித்துறை துணை செயலாளர் கே.ஜெயலலிதா கூடுதல் அறிக்கை ஒன்று தாக்கல் செய்தார், அதில் நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக 111 புகார்கள் பெறப்பட்டு உள்ளதாகவும், அதில் ஒன்பது பள்ளிகள் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீத கட்டணத்தையும் செலுத்தும்படி பெற்றோரின் புகார் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அந்த ஒன்பது பள்ளிகளுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தாளாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சிபிஎஸ்இ பள்ளிகள் மீது புகார் அளிக்க தனி மெயில் ஐடியை உருவாக்க வேண்டும் என சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் 40% கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment