
தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். அங்கு பல்வேறு மாவட்டங்களில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியபோது கடும் நடவடிக்கைகளால் அங்கு பெயர் பெற்றார்.
பெங்களூரு தெற்கு மண்டல காவல்துறை துணை ஆணையராகவும் அண்ணாமலை பணியாற்றினார். கடந்த ஆண்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் அவர் தனது சொந்த மாநிலமான தமிழகம் திரும்பினார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட அவர் அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதுமட்டுமின்றி அவர் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வந்தார். இதனால் அவர் விரைவில் அரசியல் கட்சியில் சேரவுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதரராவ் முன்னிலையில் சில தினங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் முருகன் உடன் இருந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவராக அண்ணாமலை இன்று (ஆக.29) நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, இன்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment