
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 100 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். அதேபோல 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

லெபனான்
தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி
விபத்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 100 பேர் உயிரிழந்திருக்கும்
நிலையில், இன்னும் பல நூறு பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என
அஞ்சப்படுகிறது.
வெடி விபத்து நடந்த இடத்தை சுற்றி 15 கிலோ மீட்டருக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்தை அடுத்து அடுத்த இரண்டு நாட்களுக்கு பெய்ரூட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். வெடி விபத்து நடந்த இடத்தின் அருகே, தீ விபத்து முதலில் ஏற்பட்டுள்ளது. அந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
இந்த
கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க அந்நாட்டு பிரதமர் உயர்மட்ட
விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதே நேரம் துறைமுகத்தில் பூமிக்கு அடியில்
உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்த அமோனியம் நைட்ரேட் என்ற ஆபத்தான
வேதிப்பொருளால் தான் இந்த விபத்தி நடந்துள்ளதாகவும் பிரதமர் ஹசன் டியப்
கூறியுள்ளார். 6 மாதங்களுக்கு முன்னரே அந்த அமோனியம் நைட்ரேட் சேமிப்பு
கிடங்கை அப்புறப்படுத்த நிபுணர் குழு அறிவுறுத்தியதாகவும் ஒரு செய்தி
வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பெய்ரூட் நகர ஆளுநர் அப்பவுட் பேசுகையில், "பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். அதோடு 3.5 பில்லியன் டாலர் வரை சேதம் ஏற்பட்டுள்ளது.இது மிகப்பெரிய பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும்." என்று கூறியுள்ளார். லெபனான் பிரதமர் அண்டை நாடுகளிடம் உதவி செய்ய கேட்டுக்கொண்டுள்ளார்.
பல மருத்துவமனைகளும் இடிந்து நொறுங்கியுள்ளதால், அரபு நாடுகள் மருத்துவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. அதேபோல பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்வு குறித்து பதிவிட்டுள்ளார். அதோடு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது வருத்ததை பதிவு செய்துள்ளார். ஈரான், இஸ்ரேல், கத்தார் உள்ளிட்ட நாடுகளும் மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்ய முன்வந்துள்ளன.
No comments:
Post a Comment