
கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021 ஜூலை வரை தனது பணியாளர்கள் வீட்டிலிருதே வேலை செய்யலாம் என முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் கடந்த மார்ச் மாதம் கரோனா பாதிப்பை பேரிடராக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் பொதுமுடக்கத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளின் வழக்கமான செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டனர். கரோனா பாதிப்பு தொடர்வதால் இன்றும் பல நாடுகளில் வீடுகளில் இருந்து பணியாற்றும் முறையே பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் பிரபல சமூக ஊடக நிறுவனமான முகநூல் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தனது பணியாளர்களை 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை வீடுகளில் இருந்தே பணியாற்ற வலியுறுத்தியுள்ளது. இதற்காக பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலவு செய்ய முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களை 2021 ஆம் ஆண்டு ஜூலை வரை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment