
சென்னை மாவட்ட மாணவ , மாணவர்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் (ஒப்புவிக்கும் போட்டி) குறித்து தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போட்டியிடலாம். இதுகுறித்து தமிழ் வளர்ச்சி இயக்குநர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ;
தெய்வமறை எனப் போற்றப்படும் திருவள்ளுவரின் திருக்குறளின் மாண்பை வருங்கால இளைய தலைமுறையினர் 1,330 குறட்பாக்கள் மூலம் அறிந்து, உணர்ந்து, அறநெறி ஆற்றலை தன்னகத்தே பெற்று தகைசால் மிக்கவர்களாக உருவாகிட வேண்டும் என்ற உன்னதமான நோக்கில் தமிழ்நாடு அரசு திருக்குறள் முற்றோதல் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது.
தமிழக முதல்வர் ஆணையின்படி 2018-2019 ஆம் ஆண்டு முதல் 1,330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் திருக்குறள் முற்றோதல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 50-லிருந்து 70 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட மாணவர் ஒருவருக்கு ரூ.10,000/- பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் சென்னை மாவட்டத் துணை இயக்குநர் தலைமையிலான திறனறிக் குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவர். இப்போட்டியில் பங்கேற்பவர்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றைக் குறித்து, கேள்வி கேட்டால் சொல்லும் திறன் பெற்றவராக இருந்தால் கூடுதல் சிறப்பு. திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புப் பெயர்கள், சிறப்புகள் ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.
திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கெனவே இந்தப் பரிசை பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது.
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் எழும்பூர், தமிழ் வளர்ச்சி இயக்ககம் www.tamilvalarchithurai@gmail.com என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இத்துடன் விண்ணப்பப் படிவம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு 044 28190412, 044 28190413 தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தினைத் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய முகவரி : முனைவர் தா. லலிதா, தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் மாடி, தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-8. இவ்வாறு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Newstm.in
No comments:
Post a Comment