
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கள் பள்ளிகள் பாடம் நடத்த முடியாமல் உள்ள சூழலில், மாணவர்களுக்கான பாடச்சுமையை குறைக்க திப்பு சுல்தான், மன்னர் சிவாஜி, விஜயநகரப் பேரரசு, பஹாமனி சுல்தான் பேரரசு, இந்திய அரசமைப்பின் ஒரு சில பகுதிகள், இஸ்லாம் மற்றும் கிறுஸ்துவ மதம் குறித்த சில பகுதிகளை கர்நாடக ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வி அமைச்சகம் நீக்கியுள்ளது.
கொரோனா நெருக்கடியால் 6ஆம் வகுப்பில் இருந்து 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி பயிலும் காலம் 220 நாட்களில் இருந்து 120 நாட்களாக குறைப்பட்டதே இதற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.
கற்பிக்கப்படவேண்டிய வேண்டிய பாடங்கள் குறைக்கப்ப்பட்டு, பெரும்பாலும் வீட்டில் செய்யும் பாடங்கள் அல்லது சார்டுகள் அல்லது கணிணி பிரசன்டேஷன்களாக பாடங்கள் மாற்றப்பட்டுள்ளன.
நீக்கப்படும் பாடங்கள்
உதாரணமாக 9ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் ராஜ்புத்திரர்கள் குறித்து ஆறு வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. ராஜ்புத்திரர்கள் பேரரசு, துருக்கியர்களின் இந்திய வருகை, அரசியல் மாற்றம் மற்றும் டெல்லி சுல்தான்கள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் மாணவர்கள் இதனை ஏற்கனவே ஆறாம் வகுப்பில் படித்திருக்கிறார்கள் என்பதே.
அதேபோல, முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் குறித்து 5 வகுப்புகள் எடுக்கப்பட்டது தற்போது இரண்டாக குறைக்கப்பட்டுள்ளன. மராத்திய பேரரசின் எழுச்சி, சிவாஜி மன்னரின் நிர்வாகம் போன்ற பாடங்கள் ஏற்கனவே ஏழாம் வகுப்பில் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதால் தற்போது 9ஆம் வகுப்பில் நீக்கப்பட்டுள்ளது.
இந்த பாடங்கள் நீக்கப்பட்டது சரியா?
"கோவிட்-19 சூழல் காரணமாக பாடத்திட்டங்களை 30 சதவீதம் அளவிற்கு குறைப்பது சரிதான். ஆனால், முக்கிய பாடங்களை அது பாதிக்கக்கூடாது. ஒரு சிலவற்றை முழுவதுமாக நீக்குவது தவறு " என்கிறார் திப்பு சுல்தான் பாடப்புத்தக வல்லுநர் குழுவின் பேராசிரியர் டி.ஆர். சந்திரசேகர்.
கடந்த ஆண்டு திப்பு சுல்தான் குறித்த பாடங்களை நீக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ அப்பச்சு ராஜன் வலியுறுத்தியபோது, பாடப்புத்தக வல்லுநர் குழுவிற்கு தலைமயாக இருந்தவர் சந்திரசேகர்.
மைசூர் வரலாற்றை, குறிப்பாக திப்பு சுல்தானின் பங்கு குறித்த வரும் பாடங்களை நீக்க முடியாது என்று அரசாங்கத்திடம் இவர் தலைமையிலான குழு தெரிவித்தது.
"ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு பாடம் கற்றுக்கொடுக்கப்படும். உதாரணமாக ஆறாம் வகுப்பில் திப்பு சுல்தான் பற்றிய அறிமுகம் மட்டுமே இருக்கும். அதில் குறைந்த தகவல்களே இருக்கும். ஏழாம் வகுப்பில் சற்று விரிவாக திப்பு சுல்தான் குறித்த பாடங்கள் இருக்கும். அதாவது தொழில்நுட்ப ரீதியிலான யுத்தம் செய்தது, கிராமப்புற வளர்ச்சி, கால்நடை வளர்ப்பு, கிராமப்புற பொருளாதாரம் போன்ற சமூக சீர்திருத்தங்கள் மற்றும் இந்து கோவில்களுக்கான பங்களிப்பு குறித்து இருக்கும்," என்கிறார் பிபிசி இந்தி சேவையிடம் பேசிய பேராசிரியர் சந்திரசேகர்.
அந்தக்காலத்தில் இருந்தது முடியாட்சியே. ஒரு மன்னர் மற்றொரு மன்னருடன் போர் புரிவது. அந்த யுத்தங்களில் மத ரீதியிலான விஷயங்களே இல்லை என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இதுதொடர்பாக பெங்களுரு பேராயர் பீட்டர் மச்சடோ கூறுகையில், "9ஆம் வகுப்பில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் குறித்த பாடங்கள் வருவதால், ஆறாம் வகுப்பில் இருந்து அதனை நீக்குவதாக எங்களிடம் கூறினார்கள். ஆனால். மாணவர்கள் 9ஆம் வகுப்பிற்கு செல்லும்போது, இதுகுறித்து ஏற்கனவே ஆறாம் வகுப்பில் கற்றுக்கொடுக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். இந்த கல்வித்திட்டம் ஏதோ ஒரு கொள்கையை அமல்படுத்துவது போல் இருக்கிறது," என்று தெரிவித்தார்.
"மதங்கள் குறித்த பாடங்களை நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. அது சரியல்ல. சிறு வயதிலேயே மத நல்லிணக்கனம், மனித நேயம், ஒருவரை ஒருவர் மதித்துவாழுதல் ஆகியவை கற்றுத்தரப்பட வேண்டும். இந்தியா பல மதங்களை கொண்ட நாடு. அவற்றை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வெண்டும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என எந்த மதமாக இருந்தாலும், ஒன்றாக ஒற்றுமையுடன் வாழ அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்" என்றும் பேராயர் பீட்டர் கூறுகிறார்.
அரசு என்ன கூறுகிறது?
கர்நாடக பாடநூல் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மடே கெளடா கூறுகையில், "நாங்கள் அந்தந்த பாடப்புத்தக குழுக்கள் முடிவெடுக்குமாறு கூறினோம். எதையும் நீக்க சொல்லவில்லை. தற்போது ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளிக்கல்வி அமைச்சர் சுரேஷ் குமார் இதனை ஆய்வு செய்வார். தற்போதைக்கு இந்த முடிவை கைவிடுமாறு கூறியுள்ளார். இந்த செய்தியானது கர்நாடக பாடநூல் கழகத்தின் இணையதளத்தில் வெளியடப்பட்டுவிட்டது" என்று தெரிவித்தார்.
மேலும், அரசமைப்பு சட்டத்தின் முன்னுரை அனைத்து வகுப்புகளிலும் கற்றுத்தரப்படுவதாகவும் மடே கெளவுடா கூறுகிறார்.
"பாடப்புத்தகங்களில் இருந்து எதுவும் நீக்கப்படவில்லை. புத்தகங்கள் ஏற்கனவே மாணவர்களிடம்தான் இருக்கின்றன. அதனை மாணவர்கள் வீட்டில் இருந்து படிக்கலாம். இந்தப் பாடங்களை எல்லாம் அடுத்த ஆண்டு நீக்கும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை" என்றும் அவர் கூறினார்.
வரலாற்றைக் கற்றுக்கொடுப்பது ஏன் முக்கியம்?
"கடந்தகாலம் என்பது எதிர்காலத்தின் பிரதிபலிப்பு என்பதால், வரலாற்றை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அதற்கேற்ப நமது சமூகம் வடிவமைக்கப்பட வேண்டும். அரசியல் வரலாறு மட்டுமல்ல, அறிவியல் பாடங்கள் குறித்த வரலாறை எடுத்துக்கொண்டால் அதுவும் முக்கியமானதே. அதில் இருந்துதான் சில செயல்முறைகளை கற்றுக்கொள்ள முடியும்" என்கிறார் மைசூர் பல்கலைக்கழகத்தின் முன்னால் வரலாற்று பேராசிரியர் மற்றும் திப்பு சுல்தான் குறித்த வல்லுநருமான பேராசிரியர் செபாஸ்டியன் ஜோசஃப்.
"கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொண்டால் மட்டுமே, தற்போது நாம் எங்கே இருக்கிறோம், எதை நோக்கி செல்கிறோம் என்பது குறித்து புரியும். எனவே வரலாறு மிகவும் முக்கியம்," என்று அவர் கூறுகிறார்.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment