
தமிழகத்தில் கட்டிடத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவை புதுப்பிக்காத 6 லட்சத்து 6 ஆயிரத்து 792 கட்டிட தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்படவில்லை என உயர் நீதிமன்ற கிளையில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக கட்டிட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பொன்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் அனைவருக்கும் கரோனா நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
கட்டிடத் தொழிலாளர்கள் பலர் கல்வி அறிவு இல்லாததாலும், பல்வேறு மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்றதாலும் கட்டிட தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவை புதுப்பிக்காமல் உள்ளனர்.
இதனால் வாரியத்தில் பதிவை புதுப்பிக்காத கட்டிட தொழிலாளர்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாரயணன், ராஜமாணிக்கம் விசாரித்தனர்.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், கட்டிட தொழிலாளர் நல வாரியத்தில் 18 லட்சத்து 20 ஆயிரத்து 674 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 6 லட்சத்து 6 ஆயிரத்து 792 பேர் பதிவை புதுப்பிக்க வில்லை. இவர்களுக்கு அரசின் நிவாரண நிதி வழங்கப்படவில்லை. இவர்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், கட்டிட தொழிலாளர் நல வாரியத்தில் ஆன்லைன் வழியாக பதிவை புதுப்பித்தவர்கள் எத்தனை பேர்? பதிவை புதுப்பிக்காத தொழிலாளர்கள் நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அந்தந்த மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலரின் பெயர், முகவரி தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
No comments:
Post a Comment