
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெண்ணைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கணவன், மனைவியை போலீஸார் இன்று கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்த அந்தோணி சவரிமுத்து மகள் சகாய லூர்து (21) என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு மர்ம நபர்கள் கொலை செய்து சுமார் 4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக தட்டார்மடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகேயுள்ள பாறைக்குட்டத்தைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் முருகன் என்ற இசக்கி முத்து (45) மற்றும் அவரது மனைவி பேச்சித்தாய் (40) ஆகிய இருவரும் சேர்ந்து சகாய லூர்துவை கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இருவரையும் போலீஸார் தேடி வந்த நிலையில் தலைமறைவாகினர். இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும், கடந்த 10 ஆண்டுகளாக போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்து வந்தனர்.
இதையடுத்து அவர்களை பிடிக்க கோவில்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அண்மையில் உத்தரவிட்டார்.
தனிப்படை போலீஸார் கணவன், மனைவி இருவரையும் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் இருவரும் விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து முருகன் என்ற இசக்கி முத்து மற்றும் அவரது மனைவி பேச்சித்தாய் ஆகிய இருவரையும் இன்று காலை கைது செய்தனர்.
10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன் மற்றும் மனைவியை கைது செய்த தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெகுவாகப் பாராட்டினார்.
No comments:
Post a Comment