பொது முடக்கத்திலும் உணவுப் பொருள்களைப் பயிர்செய்து
மக்களுக்கு உணவுத்தடுப்பாடு இல்லாமல் தவறாது வழங்கி வரும் விவசாயிகளை
மார்க்சிஸ்ட் கட்சியின் விவசாய சங்கத்தினர் சனிக்கிழமை பாராட்டி
கௌரவித்தனர்.
கரோனா தொற்றால்
அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் மார்ச், ஏப்ரல், மே என மூன்று
மாதங்களுக்கு அனைத்து தொழில்களும் உற்பத்தியை முடக்கி வைத்துள்ளனர். ஆனால்,
விவசாயத்தில் ஈடுபடும் உழவர்கள் உழைப்பதையே தொழிலாகக் கொண்டு தொடர்ந்து
பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு,
காய்கனிகள், பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து மக்களின் உணவுத் தேவையைத்
தீர்த்து வைத்து வருகின்றனர்.
பொது முடக்கத்தில் உணவுத் தட்டுப்பாடு
ஏற்படாத வகையில், தங்களுக்கு விலை கிடைக்காவிட்டாலும் பொருள்களை விற்பனை
செய்கின்றனர். பெரும்பாலான இடங்களில் விளைபொருள்களைப் பொதுமக்களுக்கு
இலவசமாகவும் வழங்குகின்றனர். இத்தகைய அளப்பரிய பணியில் ஈடுபடும் விவசாயிகளை
கௌரவிக்கும் வகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில்,
விவசாயிகள் கௌரவிப்பு தினமாகச் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதன்படி,
திருச்சி மாநகரம், திருவெறும்பூர், அந்தநல்லூர், திருவரங்கம்,
திருவானைக்கா, மணிகண்டம், சோமரசம்பேட்டை, வயலூர், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட
பகுதிகளில் அந்தந்த பகுதி கிளை சங்கங்களின் சார்பில் விவசாயிகளை அழைத்து
கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருவெறும்பூர்
மலைக்கோவில், மாரியம்மன் கோயில் தெருவில் 20-க்கும் மேற்பட்ட
விவசாயிகளுக்குக் கைத்தறி துண்டு அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். விவசாயிகள்
சங்க மாநிலத் துணைத் தலைவர் கே. முகமது அலி, மாநகர் மாவட்டச் செயலர் கே.சி.
பாண்டியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் பா. லெனின்,
விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் தனபால், காட்டூர் பகுதி செயலர் மணிமாறன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விவசாயிகளுக்குக் கைத்தறி ஆடைகள் அணிவித்துப்
பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment