கொரோனா பெருந்தொற்று காரணமாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் 100 ரூபாய்
மதிப்புள்ள மது கள்ளச் சந்தையில் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதற்கும்
தட்டுப்பாடு உள்ளதால் இளைஞர்கள் மாற்றுப் போதைக்கு அடிமையாகத் தொடங்கி
இருக்கிறார்கள். தமிழகத்தில் மாற்றுப் போதையை நாடிச் செல்பவர்கள் இறக்கும்
சம்பவம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் செங்கல்பட்டு பகுதியில்
வார்னிஷ் குடித்த மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை
ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு,
ஒத்திவாக்கம் ரயில் நிலையத்தில் பிரதீப் மற்றும் சிவசங்கரன் ஆகியோர்
கேட்கீப்பராக பணிபுரிந்து வருகிறார்கள்.
பிரதீப் செங்கல்பட்டு ரயில்வே குடியிருப்பில் தங்கி
இருக்கிறார். சிங்கபெருமாள்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரன்.
ரயில்வே குடியிருப்பில் இருக்கும் இவர்களின் நண்பர் சிவராமன் என்பவர்
தனியார் நிறுவனத்தில் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். மதுக்கடைகள்
மூடப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் பெயிண்டில் கலக்கும் வார்னிஷூடன்
எலுமிச்சை பழத்தைக் கலந்து மூவரும் குடித்திருக்கிறார்கள். அதைக் குடித்த
சில மணி நேரத்தில் அவர்களுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
பிரதீப் மற்றும் சிவசங்கர் ஆகியோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச்
சிகிச்சைக்காக சென்றனர். சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாத
காரணத்தால் முதலுதவி மட்டும் கொடுக்கப்பட்டு அவர்கள் வீட்டிற்கு அனுப்பி
வைக்கப்பட்டனர்.
வீட்டிற்கு வந்த அவர்களுக்கு மீண்டும் கடுமையான
வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மூவரையும்
அப்பகுதியினர் அவர்கள் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பலனின்றி 3ம் தேதி இரவே பிரதீப் உயிரிழந்தார். நேற்று அதிகாலையில்
சிவசங்கரனும் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை செய்யாமல் அவர்களின் உடல்
குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மயக்க
நிலையில் இருந்த சிவராமனுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு
வந்தது. மயக்கம் தெளிந்தபோது, மது கிடைக்காததால் மூவரும் வார்னிஷூடன்
எலுமிச்சை பழத்தை கலந்து குடித்ததாக காவல்துறையினர் மற்றும்
மருத்துவர்களிடம் தெரிவித்திருக்கிறார். பின்பு சிவராமனும் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு
மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment