ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இந்தப் புத்தாண்டில் இருந்து, புத்தகங்கள் வாசிப்பதாகவும், தனது நண்பர்களுக்கு அதைப் பரிந்துரை செய்யப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
ஃபேஸ்புக்கை எப்போதுமே டிரெண்டிங்கில் வைத்திருக்க புதிது புதிதாய் எதையாவது அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பது அதன் நிறுவனரான மார்க் ஸக்கர்பெர்க்கின் வழக்கம். இப்போதும் புத்தாண்டையொட்டி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு புத்தகம் படித்து, அதைத் தன் ஃபாலோயர்களுக்குப் பரிந்துரை செய்ய முடிவு செய்திருக்கிறார்.
அதற்கென ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை ஆரம்பித்து, அவர் படிக்கும் புத்தகங்கள் பற்றிய விவரங்களைப் பதிவிடுகிறார். தான் படிக்கப்போகும் புத்தகங்கள் பல விதமான நம்பிக்கைகள், கலாசாரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பற்றியதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார் மார்க்.
வாசிப்பதற்கான சவால் மூலம் மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாகத் தெரிவித்த மார்க், “அறிவுப்பசிக்கான தேடலாக புத்தகங்களைப் படிப்பதை உணர்கிறேன்; மற்ற எல்லா ஊடகங்களைக் காட்டிலும் புத்தகங்கள்தான் எதையும் முழுதாய் வெளிப்படுத்தி நம்மையே மூழ்கடிக்கும் திறன் பெற்றவையாய் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, ஒரு வருடத்துக்கான புத்தகங்கள் எனப் பொருள் படும்படி ‘எ இயர் ஆஃப் புக்ஸ்’ என்று ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை ஆரம்பித்தார் மார்க். ஞாயிற்றுக்கிழமை பின் மதியத்தில் தொடங்கப்பட்ட அந்த ஃபேஸ்புக் பக்கத்திற்கு இப்போது வரை கிடைத்த லைக்குகள் மட்டுமே 1 லட்சத்து 29 ஆயிரம். (இணைப்பு கீழே)
அவர் படிப்பதாய்க் கூறியுள்ள முதல் புத்தகமான மோய்சஸ் நெய்மின் ‘தி எண்ட் ஆஃப் பவர்’, உயரதிகாரிகள் அறை தொடங்கி போர்க்களங்கள் வரை, தேவாலயங்களில் இருந்து மாகாணங்கள் வரை’ பேசும் அந்தப் புத்தகம் ஞாயிறன்றே அமேசான் ஆன்லைன் தளத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டது. அமேசானின் அதிரடிப் பட்டியலில் இடம்பிடித்த ‘தி எண்ட் ஆஃப் பவர்’ அதிக வருவாயை ஈட்டிக் கொடுத்திருக்கிறது.
அப்புத்தகத்தின் ஆசிரியரான வெனிசுலாவில் பிறந்த நெய்ம், விருது பெற்ற கட்டுரையாளர், எழுத்தாளர். முன்னாள் வணிக அமைச்சரான இவர் சர்வதேச பொருளாதார திட்டத்தில் உலக அமைதிக்காகக் குரல் கொடுப்பவர்.
காலங்காலமாய் அரசாங்கங்களும், ராணுவங்களும் மற்ற நிறுவனங்களும் மட்டுமே வைத்திருந்த அதிகாரத்தையும், ஆற்றலையும் தனி மனிதர்களுக்கு எப்படிக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி அப்புத்தகம் விளக்குவதாகத் தெரிவித்திருக்கிறார் மார்க்.
பிரபல தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்ற ஓபரா வின்ஃப்ரேதான், இப்போது வரை புத்தகங்களைப் பரிந்துரை செய்வதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அவரின் சமீபத்திய புத்தகமான “தி இன்வென்ஷன் ஆஃப் விங்க்ஸ்” இந்த ஆண்டில் அதிகளவில் விற்கப்பட்ட புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment