தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.62 கோடியாக உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:-
அறிவிப்பு
1.1.15 அன்றைய தேதியை வாக்காளராக தகுதி பெறும் தேதியாக நிர்ணயித்து (18 வயது நிறைவடைந்த தேதி), வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக அறிவிக்கப்பட்டது. பெயர் திருத்தம், நீக்கம் ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தோம்.
இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் 15.10.14 அன்று வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து நவம்பர் 10-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின்னர் அவை பரிசீலிக்கப்பட்டன. தற்போது அந்த மனுக்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
பரிசீலித்து முடிவு
பெயர் சேர்ப்புக்காக பெறப்பட்ட 17 லட்சத்து 44 ஆயிரத்து 819 விண்ணப்பங்களில், 16 லட்சத்து 23 ஆயிரத்து 170 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, பெயர்கள் சேர்க்கப்பட்டன. அதாவது, விண்ணப்பித்தவர்களில் 93.02 சதவீதம் பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
மேலும், பெயர் திருத்தத்துக்காக 3 லட்சத்து 680 விண்ணப்பங்களும், தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடர்பாக 98 ஆயிரத்து 861 விண்ணப்பங்களும் கொடுக்கப்பட்டன. அவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு முடிக்கப்பட்டன.
பல இடத்தில் ஒரே பெயர்
ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் வந்தன. அதை தவிர்ப்பதற்காக தனி சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டது. அதில் பெயர், தந்தை பெயர், முகவரி போன்ற தகவல்களை வைத்து வாக்காளரின் பெயர் வேறு இடங்களில் பதிவு பெற்றுள்ளதா என்பதை அறிந்தோம்.
அதன் பிறகு அலுவலக அளவிலும், வாக்காளருக்கு நோட்டீசு கொடுத்து கள அளவிலும் சென்று சரிபார்த்து ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் இடம் பெற்றிருந்தால் அவற்றை நீக்கிவிட்டோம். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 87 ஆயிரத்து 598 பெயர்கள் நீக்கப்பட்டன.
நீக்கும் விண்ணப்பம்
இடம் மாற்றம், உறவினர் இறப்பு போன்றவற்றை தெரிவித்து, பெயர் நீக்கத்துக் காக பெரும்பாலானோர் விண்ணப்பிக்காததால் இந்த நிலை ஏற்படுகிறது. பெயர் சேர்ப்புக்காக விண்ணப்பிக்க அதிகம் பேர் வருகின்றனர். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ந்த பிறகு பழைய இடத்தில் பெயர் நீக்குவதற்கு யாரும் விண்ணப்பிப்பதில்லை.
ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பெயர் இடம் பெற்றுள்ளதை, சென்னையில் மட்டும் புகைப்படங்களை வைத்து புதிய முறையில் சரிபார்த்தோம். அதன்படி இரட்டை இடங்களில் பெயர் சேர்க்கப்பட்டதாக சந்தேகப்பட்ட 58 ஆயிரம் பெயர்களை சரிபார்த்து, அதில் 15 ஆயிரத்து 736 பெயர்களை நீக்கினோம்.
மொத்த வாக்காளர் எண்ணிக்கை
இந்த அனைத்து பணிகளையும் முடித்து இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2015-ம் ஆண்டுக்கான தமிழக வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியே 62 லட்சத்து 5 ஆயிரத்து 868 ஆகும்.
இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சத்து 67 ஆயிரத்து 817 ஆகும். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 81 லட்சத்து 34 ஆயிரத்து 605 ஆகும். மூன்றாம் பாலினமான அரவாணிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 446 ஆகும். இந்த கணக்குப்படி, ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 66 ஆயிரத்து 788 பேர் அதிகம் உள்ளனர். கடந்த ஆண்டு வாக்காளர் எண்ணிக்கையை விட (5.48 கோடி) இந்த ஆண்டுக்கான வாக்காளர் எண்ணிக்கை (5.62 கோடி) 13.36 லட்சம் உயர்ந்துள்ளது.
கடந்த அக்டோபரில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.48 கோடியாகும். அதில் ஆண் மற்றும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை தலா 2.74 கோடியாக இருந்தது. அரவாணிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 129 ஆக காணப்பட்டது.
ஆன்லைனுக்கே முக்கியத்துவம்
கடந்த ஆண்டு சுருக்க திருத்தப்பணியில், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. இனிமேல் பெயர் சேர்ப்பு, திருத்தம் ஆகியவற்றுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.
ஏனென்றால், இதில் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களில் தவறு ஏற்படுவதில்லை. எனவே திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களை கொடுக்க தேவை எழாது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது ஆன்லைன் முறையில் எளிதாக இருக்கும்.
இளைஞர் எண்ணிக்கை குறைவு
18 வயதில் இருந்து 19 வயதானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக கல்லூரி அளவில் ஆயிரத்து 571 மாணவர்கள் “கேம்பஸ் அம்பாசடராக” செயல்பட்டனர். இதன் மூலம் அந்த வயதுக்கு உட்பட்டோர் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுக்கு உட்பட்டோர் 27 லட்சத்து 34 ஆயிரத்து 388 பேர் சேர்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 20 லட்சத்து 90 ஆயிரத்து 27 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இது 76.43 சதவீதமாகும். ஆனாலும் கடந்த ஆண்டுகளைவிட (2011-ம் ஆண்டு 30.94 சதவீதம், 2013-54.21 சதவீதம், 2014- 60.92 சதவீதம்) இது அதிகமாகும். என்றாலும், மீதமுள்ள இளைஞர்களும் விரைவாக வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பிளாஸ்டிக் அட்டை
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள பிளாஸ்டிக் அட்டை, தேசிய வாக்காளர் தினம் நடைபெறும் 25-ந் தேதியன்று வாக்குச்சாவடி அளவில் நடக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
பழைய அட்டைகளையும் மாற்றி, எல்லாருக்குமே வண்ண வாக்காளர் அடையாள பிளாஸ்டிக் அட்டைகள் வழங்கும் திட்டம் உள்ளது. இதற்காக ரூ.25 வாங்கிக்கொண்டு அந்த அட்டைகளை வழங்குவோம். இந்த திட்டம் பின்னர் செயல்படுத்தப்படும்.
பட்டியல் பார்க்கும் இடங்கள்
ராணுவத்தில் பணிபுரிவோரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் விண்ணப்பங்களை பெற்ற பிறகு அதை பரிசீலித்து ஏப்ரல் 1-ந் தேதி அவர்களுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அவர்கள் பணியாற்றும் பகுதிகளிலேயே தங்களை பொது வாக்காளர்களாக பதிவு செய்யலாம்.
இந்த இறுதி வாக்காளர் பெயர் பட்டியல், லீ௴௴ஜீ://மீறீமீநீ௴வீஷீஸீ௳.௴ஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் மண்டல அலுவலகங்களிலும், மாவட்டங்களில் தாலுகா அலுவலகத்திலும் இறுதி வாக்காளர் பட்டியலை பார்த்து பெயரை சரிபார்த்துக்கொள்ளலாம்.
இனியும் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் போன்றவற்றுக்கு தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் சிறப்பு திருத்த முறையின் மூலம் பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது, இணை தலைமை தேர்தல் அதிகாரி (தகவல் தொழில்நுட்பம்) அஜய் யாதவ், இணை தலைமை தேர்தல் அதிகாரி (வாக்காளர் விழிப்புணர்வு) சிவஞானம் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment