கொரோனாவால்
உலகமே வீட்டுக்குள் முடங்கியுள்ளது. நோய்த் தொற்றால் நாளுக்கு நாள்
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. நோயால் ஒரு பக்கம்
மக்கள் மாண்டாலும், பசியால் இந்த நேரத்தில் யாரும் மாண்டுவிடக்கூடாது என்று
துடிப்புடன் செயல்படுகிறது திருவாரூரைச் சேர்ந்த "தான்தோன்றி" என்னும்
இளைஞர்கள் தன்னார்வக் குழு. திருவாரூரைச் சேர்ந்த தன்னார்வக் குழுவான
தான்தோன்றி, உணவு வங்கி ஒன்றை ஏற்பாடு செய்ய முடிவு செய்தது. அதன்படி,
திருவாரூரில் உள்ள பெரிய மளிகைக் கடைகள், மருந்தகங்கள் வாசலில் பெரிய
பெட்டி ஒன்றை இக்குழுவினர் வைத்தனர்.
உணவு வங்கி
கடைக்கு
வரும் வாடிக்கையாளர்கள், தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்
கொள்வதோடு, தங்களால் முடிந்த பொருள்களை வாங்கி இந்தப் பெட்டிகளில் போடலாம்.
இப்படி போடப்பட்ட உணவுப்பொருள்களை, போதிய உணவின்றி வாடும்
நபர்களைத் தேடிச்சென்று கொடுத்துவருகின்றனர். இது மக்களிடையே நல்ல
வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த ஏற்பாட்டைப் பற்றி தான்தோன்றிக்
குழுவின் நிறுவனர் கார்த்தி பேசுகையில், ``கொரோனா தாக்கம் ஒருபுறமிருக்க
பசியின் தாக்கமும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. அதைக் கருத்தில் கொண்டு
தான்தோன்றி அமைப்பு சார்பாக இன்று மளிகைக் கடைகளில் உணவு வங்கிகள்
தொடங்கப்பட்டுள்ளன. பலர் தங்களால் இயன்ற உணவுப் பொருள்களை
(BISCUITS,RUSK,BRED ETC) வாங்கி அந்த உணவு வங்கிப் பெட்டிக்குள்
போடுகிறார்கள். பசியால் வாடுபவர்கள் அவர்களுக்குத் தேவையானவற்றை இந்த
வங்கியில் இலவசமாக எடுத்துச் செல்கின்றனர். நாங்களும் பல இடங்களுக்கு
எடுத்துச் சென்று இல்லாதவர்களுக்குக் கொடுத்தும் வருகிறோம்" என்றார்.
கொரோனா கட்டுப்படுத்த முயற்சி
தொடர்ந்து
ஆறாவது நாளாக இவர்கள் பசியால் வாடும் ஆதரவற்ற மக்களுக்கு நேரடியாகச்
சென்று உணவு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல பல இடங்களில் உணவு வங்கிகளை
ஆரம்பித்தால், பசியால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம் என்கின்றனர்
தான்தோன்றித் தன்னார்வக் குழுவினர். பசியில்லா நாடு என்பது மட்டுமல்லாமல்
பகிர்ந்து உண் என்பதைப் பின்பற்றி இருப்பவர் இல்லாதவர்களுக்கு இது போன்று
உணவு வங்கிகள் மூலம் சிறு உதவிகளைச் செய்தால் பசியால் ஏற்படும்
உயிரழப்புகளை நிச்சயம் தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment