Latest News

தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்த அரசுக்கு மனமில்லை: திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்த அரசுக்கு மனமில்லை என திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி கரூர் கலைஞர் அறிவாலயத்தில் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு திமுக மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில் பாலாஜி இன்று (ஏப்.17) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
"கரோனா தடுப்புப் பணிக்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 3 லட்சத்து 71 ஆயிரத்து 878 நிதி ஒதுக்கி நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 22 நாட்களாகிவிட்ட நிலையில் அதில் 1 ரூபாய் கூட செலவிடப்படவில்லை. 

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் வாங்க ஒதுக்கப்பட்ட ரூ.60 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி மறுத்து, தொகுதி மேம்பாட்டு நிதியை அந்தந்தத் தொகுதிக்குப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். மாவட்டத்தில் ஒரு மருத்துவக்கல்லூரிதான் உள்ளது. பள்ளப்பட்டி, அரவக்குறிச்சியை சேர்ந்தவர்களும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுகின்றனர்.

அதில்லாமல் அரசு மருத்துவமனைகள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்களுக்கு ஏப்.14 வரை முகக்கவசம், கிருமிநாசினி வழங்க ஒதுக்கப்பட்ட நிதி இன்னும் பயன்படுத்தப்படவில்லை. தற்போது 17 தேதியாகிவிட்டது. டெண்டர் விட்டிருந்தால் கூட 15 நாட்கள்தான் ஆகும். அவசர டெண்டர் எனில் 7 நாட்கள்.

தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் முகக்கவசமின்றி பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். நிதியைப் பயன்படுத்த அரசு மனமில்லாமல் உள்ளது. அதேபோல் பசியில் வாடுபவர்கள் போன் செய்தால் உணவளிக்கும் திட்டத்தில் 3,380 பேருக்கு உணவளித்தோம். அதனையும் தடுத்து நிறுத்தினர். அரசாவது அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்திருக்கலாம். தற்போது நீதிமன்ற உத்தரவு காரணமாக மீண்டும் மக்களுக்கு உதவிகள் வழங்க உள்ளோம்".

இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இதையடுத்து, கோடங்கிபட்டி பகுதியில் 12 வகையான ரூ.550 மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வீடு, வீடாகச் சென்று வழங்கினார். மேலும் பொதுமக்கள் போன் செய்தால் கரூர் மாவட்ட திமுக சார்பில் மளிகைப் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.