மரணிப்பவரின் முகத்தைக்கூட கடைசியாக ஒரு முறை பார்க்கவிடாத
துயரத்தைக் கொடுத்துள்ளது கொரோனா. இந்தக் கொடியத் தொற்றுக்கு வேலூர்
மாவட்டத்தில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 46 வயதுடைய ஒருவர்
உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. தொற்றுக்குள்ளான 19 பேரில், 9
நபர்கள் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில், வேலூர் கொணவட்டம்
ஜாபர் சாகிப் தெருவைச் சேர்ந்த 60 வயதுடைய நபர், நேதாஜி மார்க்கெட்டில்
எலுமிச்சை பழக்கடை வைத்துள்ளார்.
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்
இந்த நபருடைய மனைவிக்குத்தான் முதலில் தொற்று ஏற்பட்டது.
அந்தப் பெண்ணுக்கு வயது 52. இவரைத் தொடர்ந்தே கணவர், 29
வயதுடைய கர்ப்பிணி மகள், 4 வயதுடைய பேத்திக்கும் தொற்று பரவியது. இவர்கள்
அனைவரும் மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவர்களின் தீவிர
கண்காணிப்பில் உள்ளனர். இந்தக் குடும்பத்துடன் கடந்த 10 நாள்களில்
தொடர்பிலிருந்த அனைவரும் தங்களின் விவரங்களை முன்வந்து தெரிவிக்க வேண்டும்
என்று மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்,
கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12
மணி வரை அரசு மருத்துவர்களைக் கொண்டு சிறப்பு மருத்துவ முகாம்
நடத்தப்படுகிறது. அங்கு சென்றும் பரிசோதனை செய்துகொள்ளலாம். அதேபோல்,
நேதாஜி மார்க்கெட்டில் உள்ள தொற்றுக்குள்ளான நபரின் கடைக்கு அருகில் உள்ள
கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் சோதனை செய்துகொள்வதற்கு ஏதுவாக வேலூர்
பழைய பேருந்து நிலையத்தில் சிறப்பு முகாம் இன்று முதல் நடத்தப்படுகிறது.
வேலூர் சி.எம்.சி மருத்துவமனை
இதே
போன்ற சிறப்பு மருத்துவ முகாம்கள் ஆர்.என்.பாளையம், கஸ்பா, சைதாப்பேட்டை,
சின்ன அல்லாபுரம், கருகம்புத்தூர் ஆகிய பகுதிகளிலும் நடத்தப்பட்டு
வருகின்றன. எனவே, தொண்டை வலி, காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல்
ஆகிய அறிகுறி உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் சி.எம்.சி தனியார்
மருத்துவமனையைத் தவிர்த்து வேறு எந்த தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்ல
வேண்டாம். அரசு மருத்துவமனைகள் அல்லது சி.எம்.சி மருத்துவமனையில் மட்டுமே
சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment