
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு சுய ஊரடங்கை
அறிவித்தபோது, புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நோயின்
தீவிரம் கருதியும், சுற்றுலா மாநிலமான புதுச்சேரியில் அயல் நாட்டவர்கள்
அதிகம் பேர் இருப்பதாலும் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில்
இருக்கும் என்று முதலில் அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி. அதையடுத்து,
மத்திய அரசு 21 நாள்கள் வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

இந்த நாள்களில் அத்தியாவசிய பொருள்களுக்கான கடைகள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் மக்கள், நோயின் தீவிரத்தையும் அதன் ஆபத்தையும்
பொருட்படுத்தாமல் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதுடன், அரசு குறிப்பிட்ட
சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் இருக்கின்றனர்.
புதுச்சேரியில்
இன்று காலை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இறைச்சிக்கடைகள்,
உழவர் சந்தை, பெரியமார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மக்களின் கூட்டம்
அலைமோதியது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போதும், முகக்கவசம்
அணிந்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தபோதும் எதையும்
கடைப்பிடிக்காமல், போதுமான இடைவெளி இல்லாமல், மக்கள் கடைகளில் பொருள்களை
வாங்கினர்.
இந்நிலையில்,
இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "உலகம் முழுவதிலும்
கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வளர்ச்சியடைந்த மற்றும்
வளர்ந்துவரும் நாடுகளே அதிர்ந்திருக்கின்ற இந்நேரத்தில், புதுச்சேரி மக்கள்
அரசின் அறிவுறுத்தலையும் மீறி வெளியில் சுற்றிவருகின்றனர்.
மக்கள்
ஒத்துழைப்புடன் புதுச்சேரியில் கொரோனா தொற்று இல்லாத நிலையை நிறைவேற்றி
இருக்கிறோம். தேவையில்லாமல் வெளியில் செல்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும். புதுச்சேரியில், இதுவரை 1,124 பேர்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று, பெரியமார்க்கெட் மற்றும் மாமிசம்
வாங்கும் இடங்களில் மிகப்பெரிய கூட்டம் இருந்தது. புதுச்சேரி மக்கள்
உயிரைப்பற்றி கவலைப்படவில்லை. எனவே, அவர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களான மளிகை, மருந்து, காய்கறி கடைகளை திறந்து
வைத்திருக்கிறோம். ஆனால், மக்கள் தேவையின்றி வெளியில் வருவதால் அவர்களுக்கு
நேரக் கட்டுப்பாடு விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. வாகனங்களில் பெட்ரோல்
போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். உங்களை தனிமைப்படுத்திக்
கொள்ளுங்கள் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். உங்களது உயிருக்கும்,
குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்.
பெரிய
மார்க்கெட் இன்று முதல் மூடப்படுகிறது. அதற்கு மாற்றாக புதிய பேருந்து
நிலையத்தில் மொத்த விற்பனைக் கடைகள் திறக்கப்படும். இது தொடர்பாக
குடிமைப்பொருள் மற்றும் காவல்துறையினருடன் கலந்து பேசி முடிவெடுக்க
இருக்கிறேன். புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் சில்லறை
வியாபாரமும் நடைபெறும். அதேபோல ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகர், தட்டாஞ்சாவடி
மார்க்கெட், கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் நவீன மீன் அங்காடி,
செஞ்சிசாலை மார்க்கெட், காலாப்பட்டு அரசு பெண்கள் பள்ளி ஆகிய இடங்களில்
சில்லறை வியாபாரம் நடைபெறும். உழவர் சந்தை உள்ள பகுதிகளில் சில்லறை
வியாபாரம் திறக்கப்படவில்லை. 200 சில்லறை வியாபாரிகள் குலுக்கல் முறையில்
தேர்வு செய்யப்பட்டு விற்பனைக்கு அனுமதிக்கப்படுவர். இந்த நடைமுறைகள் நாளை
முதல் செயல்படுத்தப்படும்" என்றார்.
No comments:
Post a Comment