
"கொரோனா பெருந்தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள 21
நாள்களும் வீட்டிலேயே இருங்கள். அதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு' என
தூய்மைப்பணியாளர்கள் முதல் பிரதமர் மோடி வரை எல்லோரும் ஒரே குரலாக
ஒலிக்கிறார்கள். ஆனாலும் செங்கல்பட்டு பகுதியில், கொரோனாவின் ஆபத்தை
உணராமல் மக்கள் கூடும் காட்சிகள் வேதனை அளிப்பதாகவே உள்ளது. இவற்றைக்
கட்டுப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் ஓய்ந்துவிட்டதா என்ற சந்தேகம்தான்
நம்முன் எழுகிறது.

செங்கல்பட்டு
பகுதிகளில் உள்ள பெரும்பாலான மருந்துக் கடைகளில் வழக்கம் போலவே கூட்டம்
கூட்டமாக மக்கள் மருந்து வாங்குவதைக் காணமுடிகிறது.
சீசன் வியாபாரம் என்பதைப் போல லாபம் ஒன்றே குறிக்கோளாகச்
செயல்படும் பெருவணிக மருந்துக் கடைகள், கொள்ளை லாபம் பார்ப்பதிலேயே குறியாக
இருக்கிறார்கள். 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்ற சாதாரண மாஸ்க், 15
ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. செங்கல்பட்டு சிபா
மருந்துக் கடையில் மாஸ்க் வாங்கிய கையோடு வெளியே வந்த ஒருவரிடம் பேசினோம்.
'ஒவ்வொரு நாளும் ஒரு விலை என மாஸ்க் விற்கிறார்கள். நான் வாங்கிய
மாஸ்க்கிற்கு பில் கொடுக்கவில்லை' என்கிறார் வேதனையாக. மாஸ்க் தட்டுப்பாடு
என்ற காரணத்தைக் காட்டி, மக்களை வஞ்சிக்கும் வியாபாரத் தளங்களாக மாறிவிட்டன
பெரும்பாலான மருந்துக் கடைகள்.
காய்கறி மார்க்கெட் பகுதியில்
நெருக்கம் அதிகம் இருந்த காரணத்தால் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு
காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டது. பெரிய நுழைவு வாயில் உள்ள நிலையில்
அதைப் பூட்டிவிட்டு, குறுகிய வழியிலேயே மக்கள், வியாபாரிகள் என அனைவரும்
அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் ஒருவரையொருவர் உரசியபடிதான் உள்ளே செல்ல
முடிகிறது. ஒவ்வொரு கடையிலும் மக்கள் எவ்வித அச்சமும் இன்றி நெருக்கமாகவே
இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் முகத்தில் அணியவேண்டிய மாஸ்க் மற்றும்
கைக்குட்டைகளைக் கடமைக்காக கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர்.
செங்கல்பட்டு
மார்க்கெட் பகுதியில் உள்ள சில மளிகைக் கடையில் கண்ட காட்சி நம்மை
அதிர்ச்சியடையச் செய்தது. ஷட்டரைத் திறந்து, கடைக்குள் ஏழெட்டுப் பேரை
திணிக்கிறார்கள். பின்பு, ஷட்டரை இழுத்து மூடிவிடுகிறார்கள். உள்ளே
சென்றவர்கள் நெருக்கமாக நின்றுகொண்டு, மூச்சு முட்ட மளிகைப் பொருள்களை
வாங்குகிறார்கள்.
சிறிது நேரம் கழித்து ஷட்டரைத் திறந்து, வெளியில்
நிற்கும் வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்பி மூடிவிடுகிறார்கள். அரசாங்கம்
பிறப்பித்த 144 தடை உத்தரவின் நோக்கம் என்ன என்பதைக்கூட வியாபாரிகள்
புரிந்துகொள்ளவில்லை என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை. மாவட்ட
நிர்வாகம் கடை உரிமையாளர்களுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு
ஏற்படுத்தினால் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை
உள்ளது.
144
தடை உத்தரவு பிறப்பித்த ஓரிரு நாள்களிலிருந்த கட்டுப்பாடு கொஞ்சம்
கொஞ்சமாகத் தேய்ந்துகொண்டே வருகிறது. ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் 3 அடி
இடைவெளி விட்டு பொருள்களை வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு மக்களிடத்திலும்
இல்லை; வியாபாரிகளிடமும் இல்லை.மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்
அரசின் முதல் பணியாக இருக்க வேண்டும். அரசு அதிகாரிகள் இதை உணர்வார்களா..?
No comments:
Post a Comment