செங்கல்பட்டில் இயங்கிவரும் ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தைப்
பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய
சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் ஆகியோரை டி.கே.ரங்கராஜன்
எம்.பி.நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மோடி, ஹர்ஷவர்த்தனிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
''தமிழ்நாட்டில்
செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் தடுப்பூசி மருந்துகளைத் தயாரிக்கும் அரசு
பொதுத்துறை நிறுவனமான `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் தற்போது மூடப்படும்
நிலையில் உள்ளது. கடந்த பிப்ரவரி 27 அன்று நான் அந்த நிறுவனத்திற்கு நேரில்
சென்று ஆய்வு மேற்கொண்டதோடு, இந்நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து
தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்ட நிர்வாகம் தொடர்பான உயரதிகாரிகளையும்
மற்றும் தொழில்நுட்பம் சாந்த ஊழியர்களையும் சந்தித்து, அவர்கள் மூலம்
பெறப்பட்ட விவரங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில்
ஒன்றாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி
என்பது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதோடு, நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள்
மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்நிறுவனத்தைப் புனரமைத்து
உற்பத்தியைத் தொடங்கிட உடனடியாக தற்போது ரூ.565 கோடி நிதி தேவையாக உள்ளது.
அதிலும் கூட ரூ.300 கோடி வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடனுக்கான
நிலுவையைக் கட்டுவதற்கான தேவை எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே
ரூ.594 கோடி செலவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நன்கு
திட்டமிடப்பட்டுள்ள கட்டிடங்களைக் கொண்டுள்ளதோடு, பல்வேறு தடுப்பூசி
மருந்துகளின் உற்பத்திக்குத் தேவையான நவீன உபகரணங்களும் வாங்கி
நிர்மாணிக்கப்பட்டுள்ளன. உலகத்தரத்தில் உற்பத்தியை மேற்கொள்ளவும்,
ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலுமானதொரு ஒருங்கிணைந்த தடுப்பூசி
மருந்துகள் தயாரிப்பு வளாகமாகவும் இது உள்ளது..
இத்தகைய அம்சங்களோடு
உருவாக்கப்பட்டுள்ள இந்நிறுவனம் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில்
உள்ளது. கடந்த ஏழு மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத
நிலையிலும், மேலும் மின் கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றைக் கூட
செலுத்த முடியாத நிலையிலும் உள்ளது. உடனடியாக புனரமைப்புப் பணிகளை
மேற்கொள்ளவும், ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை வழங்கவும் ரூ 2 கோடி தேவை என
அரசிடம் ஏற்கெனவே கோரப்பட்டுள்ளதோடு நிதி ஆயோக் கவனத்திற்கும் கொண்டு
செல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு இந்நிறுவனத்தை புனரமைப்பதற்கான
முயற்சிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக ஏதேனும் ஒரு தனியார் நிறுவனத்திடம்
ஒப்படைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.
இன்று
உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் தொற்று நோய் உள்ளிட்ட பல்வேறு
பருவங்களில் வரும் நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான தடுப்பூசி
மருந்துகளை அரசாங்கத்திற்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள்தான்
தயாரித்து அளிக்கின்றன. மேலும், அரசாங்க நிறுவனங்கள் தான் மிகவும் குறைந்த
விலையில் இத்தகைய மருந்துகளை அளிக்க முடியும். எனவே அந்த வகையில் மக்களின்
பொது சுகாதாரத்தை பாதுகாப்பது என்பது நமது அரசின் சமூக கடமை என்பதாகத்தான்
இப்பிரச்சினையும் பார்க்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
ஏழைகள்
மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் கோடிக்கணக்கான மக்களைக் கொண்டுள்ள
நமது நாட்டில் மக்களுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகளை மிகக்குறைந்த
விலையில் அளித்தால் தான் மக்களுக்குப் பயனளிக்கும். இத்தகைய அத்தியாவசிய
தடுப்பூசி மருந்துகளின் உற்பத்தி தனியாரின் கைகளுக்குச் சென்று விட்டால்
ஏழை மக்களுக்கு அது எட்டாக்கனியாகிவிடும். எனவே தேசத்தின் சுகாதாரத்தையும்,
மக்களின் நல்வாழ்வையும் கணக்கில் கொண்டு செங்கல்பட்டில் இயங்கிவரும்
`ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை உடனடியாக புனரமைக்கவும், மருந்து
உற்பத்தியைத் தொடங்கவும் தேவையான நிதியை அளித்து உதவிட வேண்டும்''.
இவ்வாறு டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment