Latest News

  

கோவில்பட்டி நகராட்சி சந்தை புதிய கூடுதல் பேருந்து நிலையத்துக்கு மாற்றம்: குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு

கோவில்பட்டியில் உள்ள நகராட்சி சந்தையில் ஓரே நேரத்தில் அதிகளவு மக்கள் கூடுவதை தடுப்பதற்காக சந்தை புதிய கூடுதல் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டு இன்று முதல் செயல்படுகிறது.

கோவில்பட்டியில் நகராட்சி தினசரி சந்தை ஊருக்கு மத்தியில் உள்ள பகுதியில் இயங்கி வந்தது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளபடி சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதால் நான்குவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் சந்தை இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், 128 கடைகள் அமைப்பதற்காக புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் மஞ்சள் கோடுகள் வரையப்பட்டுள்ளன. 

இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், ஆணையர் ராஜாராம் ஆகியோர் முன்னிலையில் பேருந்து நிலைய வளாகத்தில் சந்தை அமைக்க விண்ணப்பித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் காய்கறிகள், பழக்கடைகள், தேங்காய் கடைகள் இயங்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி தினசரி சந்தையில் 3 மளிகை கடைகளுக்கு வீட்டுக்கு சென்று பொருட்கள் வழங்குவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடைகள் அனைத்தும் அரசு உத்தரவுப்படி காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தான் செயல்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் கே.பி.ராஜகோபால் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கிய மனுவில், கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையத்துக்கு நகராட்சி காய்கறி சந்தை மாற்றப்படுவதால், மக்களுக்கு காலவிரயமும், பொருள் விரயமும் ஏற்படும். பெண்கள் வந்து செல்ல பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும்.

ஒரே இடத்தில் சந்தை அமைப்பதன் மூலம் கரோனா வைரஸ் பரப்பு கூடாரமாக சந்தை மாறிவிடும். எனவே, காய்கறி கடைகளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கதிரேசன் கோவில் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் உழவர் சந்தை ஆகிய இடங்களில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

5-ம் தூண் அமைப்பு நிறுவனர் அ.சங்கரலிங்கம், ஏ.ஜ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் க.தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.ராஜசேகரன் உள்ளிட்டவர்கள் வழங்கிய மனுவில், 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவால் கோவில்பட்டியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நகராட்சி சந்தை, புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்துக்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது. இது கரோனா பாதிப்பை குறைப்பதாக இருக்காது.

அதிகப்படுத்துவதாக தான் இருக்கும். ஊரில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்படுவதால், வாகன போக்குவரத்து இல்லாத நிலையில் அங்கு செல்வதில் மக்கள் சிரமப்படுவார்கள்.

எனவே, கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதி என பிரித்து தற்காலிக சந்தைகள் அமைத்தால் மக்கள் ஒரே இடத்தில் அதிக கூடுவதை தவிர்க்கலாம். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.