Latest News

  

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணை ரத்து; பாமகவுக்கு கிடைத்த பெரும் வெற்றி: ராமதாஸ் பெருமிதம்

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான அரசாணை ரத்து செய்யப்பட்டிருப்பது பாமகவுக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 57,345 ஏக்கர் பரப்பளவில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் வேளாண் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருந்த இத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது பாமகவின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் 25 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் 20 கிராமங்கள் என மொத்தம் 45 கிராமங்களை பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் மண்டலமாக மாற்றும் இத்திட்டம் கடந்த 2008-09 ஆம் ஆண்டுக்கான தொழில்துறை மானியக் கோரிக்கையில்தான் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அந்தத் திட்டத்தின் ஒரு கட்டமாக கடலூர் மாவட்டத்தில் நாகார்ஜுனா நிறுவனத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைக்கு 02.07.2008 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் அடிக்கல் நாட்டி வைத்தார். அப்போது உருவாக்கப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணையை 2017-ஆம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி இப்போதைய அரசு வெளியிட்டது. அதுமட்டுமின்றி, அத்திட்டத்தை ரூ.92,000 கோடியில் நாகார்ஜுனா குழுமம் செயல்படுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதால் இத்திட்டத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நாசகார திட்டத்தை கைவிடாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருந்த பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து கருத்துக் கேட்டார். அதனடிப்படையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும்படி அரசை வலியுறுத்தியது.

அதன்பின்னர் 2018-ம் ஆண்டில் நாகார்ஜுனா நிறுவனம் திவால் ஆன நிலையில், அந்நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படவிருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்தைக் கைவிடும்படி மீண்டும் கோரிக்கை விடுத்தேன். அதன்பயனாக கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்தைக் கைவிடுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டால், அதில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். கடலூர் மாவட்டத்தில் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரால் அப்பகுதியில் நிலத்தடி நீரில் டயாக்சின் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் கலந்துள்ளது. அதனால், அப்பகுதிகளில் வளரும் தென்னை மரங்களில் காய்க்கும் இளநீரிலும் டயாக்சின் உள்ளது; இதையெல்லாம் கடந்து நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் தாய்மார்களின் தாய்ப்பாலிலும் டயாக்சின் வேதிப்பொருள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் வாழத்தகுதியற்றதாக மாறி விட்ட கடலூர் மாவட்டம் சுற்றுச்சூழல் சீரழிவு மிகுந்த கறுப்பு மாவட்டம் என்றழைக்கப்படுகிறது.

கடலூர் மாவட்ட மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலைகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்தும், அவற்றைப் போக்க வலியுறுத்தியும் கடந்த 15 ஆண்டுகளாக ஏராளமான போராட்டங்களை நான் நடத்தியுள்ளேன். அதே நோக்கத்துடன் தான் சுற்றுச்சூழலை சீரழிக்கக்கூடிய பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்திற்கு எதிராகவும் பாமக சார்பில் தொடர் இயக்கங்கள் நடத்தப்பட்டன.

அதேபோல், நாகை மாவட்டத்திலும் ஏராளமான மின்சாரத் திட்டங்களும், கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் விவசாயம் அழிந்து போயிருக்கும். அத்திட்டம் கைவிடப்பட்டிருப்பதன் மூலம் இரு மாவட்டங்களும் காப்பாற்றப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசுக்கு பாமக நன்றி தெரிவித்துக் கொள்கிறது. விவசாயத்தை பாதிக்கும் இத்திட்டத்தை கைவிடச் செய்து விவசாயத்தை காப்பாற்றியதில் பாமக பெருமிதம் அடைகிறது'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.