
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, நாட்டின் பல்வேறு
பகுதிகளில் போராட்டம் நடந்துவருகிறது. தலைநகர் டெல்லியின் ஷாகீன் பாக்
பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
பெண்கள், குழந்தைகளுடன் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.
டெல்லியில், கடந்த மாதம் கடுமையான பனிப்பொழிவு இருந்தபோதும், மக்கள் இரவு
நேரங்களில் கூடாரம் அமைத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆங்கிலப் புத்தாண்டு, குடியரசு தினக் கொண்டாட்டம் என எல்லாமே இந்தப் போராட்டக்களத்தில்தான் கொண்டாடப்பட்டன.
புத்தாண்டு பிறக்கும்போது போராட்டக் களத்தில் ஓங்கி
ஒலித்த தேசிய கீதம், பிப்ரவரி 14-ம் தேதி, பிரதமர் மோடிக்கு விடுத்த
அழைப்பு என கவனம் ஈர்த்துவருகின்றனர், ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள்.
சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலின்போதுகூட, ஷாகீன்
பாக் போராட்டத்தை குறிப்பிட்டுப் பேசாத தலைவர்களே இல்லை.
இந்நிலையில்தான்,
ஷாகீன் பாக் போராட்டத்தால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக உச்ச
நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கலானது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,
''புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரும்போது, மக்களுக்கு மாறுபட்ட கருத்து
உண்டாகும். ஜனநாயக நாட்டில் மக்கள் போராடுவதற்கு உரிமையுண்டு. அந்தப்
போராட்டம், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது'' என கருத்து
தெரிவித்த நீதிமன்றம், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மூத்த
வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை நியமித்தது.
ஷாகீன்
பாக் போராட்டக்களத்துக்கு சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோர்
இன்று சென்றனர். அங்கிருந்தவர்கள் மத்தியில் அவர்கள் உரையாற்றினர்.
அப்போது, ``போராட்டம் நடத்த உங்களுக்கு உரிமையுண்டு என உச்ச நீதிமன்றமே
கூறியுள்ளது. உங்களைப் போலவே மற்றவர்களுக்கும் இங்கே உரிமை உள்ளது.
அவர்கள், தங்களது சாலையைப் பயன்படுத்த வேண்டும். கடைகளைத் திறக்க வேண்டும்.
உங்களுடைய கருத்துகளைக் கேட்கத்தான் நாங்கள் இருக்கிறோம். ஒன்றாக
இருந்தால்தான் ஒரு தீர்வை நோக்கி செல்லமுடியும். உச்ச நீதிமன்றத்தின்
அறிவுறுத்தலின் பேரில்தான் நாங்கள் இங்கே வந்துள்ளோம். நாங்கள் அனைவரிடமும்
பேசுவோம். அனைவருடைய ஒத்துழைப்புடன் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு
காணப்படும்" என்றனர்.
அங்கிருந்த
போராட்டக்காரர்கள், ``இது பிரதான சாலை இல்லை. டெல்லியிலிருந்து நொய்டா
செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலை உள்ளது. நாங்கள் இரண்டு சாலைகளை மட்டுமே
ஆக்கிரமித்துள்ளோம். இந்தப் பகுதியில் இன்னும் நிறைய வழிகள் உள்ளன.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர்கள், இந்தப் பாதையில் மட்டுமே செல்ல
வேண்டும் என ஏன் அடம்பிடிக்கிறார்கள். நாங்கள் இங்கிருந்து கலைந்து
சென்றுவிட்டால், எங்களை மறந்துவிடுவார்கள். நாங்கள் போராடும்போதே இங்கு
யாரும் வரவில்லை" என்றனர்.
இந்த
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள்,
``உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நாங்கள் இங்கு வந்துள்ளோம். இன்றைய
பேச்சுவார்த்தை ஒரு முன்னெடுப்புதான். ஒரே நாளில் தீர்வு கிடைத்துவிடாது.
பிப்ரவரி 23-ம் தேதி வரை நாங்கள் தினமும் இங்கு வந்து பேச்சுவார்த்தையில்
ஈடுபடுவோம்" என்றனர்.
No comments:
Post a Comment