
கலவரம் நடந்து மூன்று நாட்கள் கழித்து பிரதமர் மோடி அமைதிகாக்க
வேண்டும் என்றார். ஆனால், டெல்லி சட்டமன்ற தேர்தலின் போது வீடுவீடாக சென்ற
அமித்ஷா இவ்வளவு கலவரம் நடந்துள்ள சூழ்நிலையில் வெளியே வர மறுப்பது ஏன்
என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கலவரத்துக்கு முழுக்க முழுக்க ஒரு தரப்பினர்தான் காரணம் என்ற வகையில் பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கூட்டாளியான சிவசேனா,
டெல்லி கலவரம் தொடர்பாக தன்னுடைய சாம்னா இதழில் தலையங்கம் தீட்டியுள்ளது.
அதில், "நாட்டின் தலைநகரில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்... ஆனால் மோடி
அமைச்சரவையின் பாதி கேபினட் அமைச்சர்கள் டிரம்புக்கு ஹாய் சொல்ல அகமதாபாத்
சென்றுவிட்டனர். மூன்று நாட்களுக்குப் பிறகு அதைிகாக்க வேண்டும் என்று
பிரதமர் கூறுகிறார். நான்காவது நாள்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்
தோவல் தன்னுடைய படைபரிவாரங்களுடன் டெல்லி சாலையில் காட்சியளிக்கிறார்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் நேரத்தில் வீடுவீடாக சென்ற உள்துறை அமைச்சர்
அமித்ஷா இன்னும் வெளியே வர மறுப்பது ஏன்? இதுவே காங்கிரஸ் ஆட்சியில் இது
போன்ற சம்பவம் அரங்கேறியிருந்தால் காங்கிரஸ் உடனடியாக ராஜினாமா செய்ய
வேண்டும் என்று பா.ஜ.க ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருக்கும்.
டிரம்பை வரவேற்க குஜராத்தில் அமித்ஷா இருந்தபோது இந்திய உளவுத்துறை அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கேள்விகளை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பினால், தேச விரோதிகள் என்று கூறுவீர்களா?" என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment