Latest News

  

எதிர்ப்பவர்களை தேச விரோதி என முத்திரை குத்தக்கூடாது.. உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு

டெல்லி: எதிர்ப்பு கருத்துக்களை எப்போதும் ஊக்கப்படுத்த வேண்டும்.. அதுவே நாட்டை நல்வழிப்படுத்த உதவும் என்றும் அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது. என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்..
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், என்ஆர்சிக்கு எதிராகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த சூழலில் அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரைக் குத்தக்கூடாது என்றும் எந்த ஒரு விஷயத்திலும் எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்றும், அது வன்முறையாக மாறாத வரை அதை தடுக்கும் உரிமை அரசுக்கு இல்லை என்றும் நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக ' ஜனநாயகமும் எதிர்ப்புணர்வும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை (இன்று) நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,
49 சதவீத மக்கள்
தேர்தலில் ஒரு கட்சி 51 % வாக்குகளை பெற்றுள்ளது என்றால் மீதமுள்ள 49% மக்களும் அடுத்த ஐந்து ஆண்டு காலம் எதுவுமே பேசக் கூடாது என்று அர்த்தம் இல்லை.. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜனநாயகத்தில் பங்கு இருக்கிறது அரசுகள் எப்போதுமே சரியாக இருப்பது இல்லை. நாம் அனைவரும் தவறு செய்கிறோம், எதிர்ப்புகள் வன்முறையாக மாறாத வரை அரசுகளுக்கு அதை தடுக்க உரிமையில்லை.
கேள்வி எழுப்புவது உரிமை
ஒரு விஷயத்தில் நீங்கள் மாறுபட்ட கருத்து கொண்டிருப்பதால் நீங்கள் நாட்டை அவமரியாதை செய்வதாக அர்த்தம் கிடையாது. மாறுபட்ட சிந்தனைகள் உதிக்கும்போதே அங்கு எதிர்ப்புணர்வு நிச்சயம் உண்டாகும். கேள்வி எழுப்புவது என்பது ஜனநாயகத்தின் வழிவந்த உரிமையாகும்.அமைதியான வழிகளை கடைபிடிக்கும் வரை எதிர்க்கட்சிகளுக்கு எப்போதுமே போராடுவதற்கு உரிமை உள்ளது.
ஜனநாயகம் வெல்ல
சமீபத்தில் நீதிபதி சந்திராசூட் உரை ஒன்றில் தெரிவித்ததைப் போன்று, ' எதிர்ப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துவது ஆராய்ந்தறியும் வகையிலான ஜனநாயகத்தை தடுத்து விடும். எனவே அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது. குடிமகன்களின் சிவில் உரிமைகளை பாதுகாக்கும் போதுதான் ஜனநாயகம் வெற்றியடைந்ததாகக் கருத முடியும்.
கருத்து வேறுபாடு
எதிர்கருத்துக்களுக்கு எப்போதும் முக்கியமான பங்கு உண்டு. அது ஊக்குவிக்கப்பட வேண்டும். நாட்டை வழிபடுத்துவதற்குத் தேவையான நல்ல வழிகளை கண்டடைய அது உதவும். "இன்று நாட்டில், கருத்து வேறுபாடு தேச விரோதமாகக் காணப்படுகிறது. அரசாங்கமும் நாடும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். சில விஷயங்கள் தேச விரோதமானவை என்பதால் அந்த விவகாரத்தில் ஆஜராக முடியாது என்று கூறி பார் சங்கங்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவதை நான் காண்கிறேன். இது சரியல்ல. நீங்கள் சட்ட உதவியை மறுக்க முடியாது.
வளர்ச்சி அடைய
சில விதிகள் கேள்விக்குள்ளாகும் வரை ஒரு சமூகம் வளர்ச்சி அடையாது. அனைவரும் ஒரே விஷயத்தை , ஒரே பாதையை பின்பற்றிக்கொண்டிருந்த புதிய சிந்தனைகள் விரிவடையாது. காந்தி, காரல் மார்க்ஸ், முகமது நபி ஆகியோரை எடுத்துக்கொள்ளுங்கள் புழைய விஷயங்களுக்கு எதிராக இருந்தார்கள்" இவ்வாறு கூறினார்.
நீதிபதி டி.ஒய் சந்திரசூட்
இந்த மாதத்தில் இரண்டாவது உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து வேறுபாடுகளை அரசு கட்டுப்படுத்தும் விதம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்கள். கடந்த வாரம், உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட், ஜனநாயகத்தில் எதிர்ப்பு என்பது பாதுகாப்பு வால்வு போன்றறு என்றும், எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவது "அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் இதயத்தில் தாக்குகிறது" என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.