டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த மர்ம
நபர்கள் பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்
மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத்
தாக்குதலில் ஜே.என்.யூ-வின் மாணவர் அமைப்பின் தலைவர் ஆயிஷ் கோஷ் பலத்த
காயமடைந்தார். இந்தத் தாக்குதல் தொடர்பாகப் பல்வேறு தகவல்கள் பல்வேறு
தரப்பினராலும் சொல்லப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, தாக்குதல் குறித்து
ஜே.என்.யூ-வின் மாணவர் அமைப்பின் தலைவர் ஆயிஷ் கோஷ் இன்று செய்தியாளர்களைச்
சந்தித்தார்.

அப்போது,
``கடந்த 4-5 நாள்களாக ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்த சில பேராசிரியர்கள் எங்கள்
இயக்கத்தை உடைக்க வன்முறையை ஊக்குவித்தனர்.
நேற்றைய தாக்குதல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி
அமைப்பினரால் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று. சபர்மதி விடுதியில் போராடத்
தயாராக இருந்தபோது தாக்குதல் நடந்தது. அவர்கள் மாணவர்களை தனிமைப்படுத்தி
தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலின் போது ஒவ்வொரு மாணவரின் பெயரைச்
சொல்லியே தாக்குதல் நடத்தினர். துணைவேந்தர்தான் ஏபிவிபி வழியாகத் தாக்குதலை
ஏற்பாடு செய்தார். அவரை உடனடியாக நீக்க வேண்டும். ஜே.என்.யூ
காவலாளிகளுக்கும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் ஏற்கெனவே தொடர்பு
இருந்துள்ளது. காவலாளிகள் யாரும் வன்முறையைத் தடுக்க முயற்சி செய்யவில்லை.
ஜே.என்.யூ மற்றும் டெல்லி போலீஸாரிடம் பாதுகாப்பு கேட்பது தவறா?
ஏபிவிபி
தாக்குதல்களைக் கண்டு அஞ்சப்போவதில்லை. அவர்களின் ஆயுதங்களையும்
தாக்குதல்களையும் கருத்துகள் மூலம் எதிர்கொள்வோம். மாணவர்களைத் தாக்கிய
ஒவ்வொரு இரும்புக்கம்பிக்கும் விவாதம் மற்றும் கலந்துரையாடல் மூலம் பதில்
திருப்பித் தரப்படும். ஜே.என்.யூவின் கலாசாரம் எந்த நேரத்திலும்
அழிக்கப்படாது. ஜே.என்.யூ அதன் ஜனநாயக கலாசாரத்தை நிலைநிறுத்தும்" என்றார்.
இதன்பின்பேசிய,
மாணவர் அமைப்பின் துணைத் தலைவர் சாகேத், ``தாக்குதலின்போது போலீஸுக்கு
நாங்கள் போன் செய்தோம். இரண்டு மணிநேரமாக அழைத்தும் எந்த உதவியும்
கிடைக்கவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே டெல்லி போலீஸ்
பிஆர்ஓ எம்.எஸ்.ரந்தவா தாக்குதல் தொடர்பாகப் பேசுகையில், ``வன்முறை பற்றிய
தகவல்கள் கிடைத்த பின்னர் பல்கலைக்கழக வாயிலை அடைந்துவிட்டோம்.
ஆனால்,
அனுமதி மறுக்கப்பட்டதால் உள்ளே நுழைய தாமதமாகிவிட்டது. பின்னர் நாங்கள்
பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து கொடி அணிவகுப்பு நடத்தினோம். தாக்குதல்
தொடர்பாக போலீஸ் கமிஷனரின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. சில
முக்கியமான தடயங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த விவகாரத்தில்
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது. தாக்குதல்
தொடர்பான காட்சிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன" என்றனர்.

No comments:
Post a Comment