
தமிழகத்திலேயே முதன் முறையாக ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்
பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் ரியா என்ற திருநங்கை.
இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்துக்குட்பட்ட 2வது வார்டில்
போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளரைவிட 950 வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றுள்ளார். இவர் தி.மு.க வரலாற்றிலேயே உதய சூரியன் சின்னத்தில்
போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையும்
பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி ரியாவிடம் பேசியபோது, ``எங்க அப்பா பெயர் அன்பரசன்.
லாரி டிரைவராக இருக்காங்க. அம்மா சின்னப்பாப்பா வீட்டில்
இருக்காங்க. என் கூடப் பிறந்தவர் ஒரு தம்பி சிலம்பரசன். அவனும் மினிடோர்
டிரைவராக இருக்கிறான். நாங்க திருச்செங்கோடு கருவேப்பம்பட்டி அருகே
சீனிவாசம்பாளையத்தில் குடியிருக்கிறோம். நான் 9-ம் வகுப்பு வரை
படித்திருக்கிறேன்.
என்னுள் பெண்மைத் தன்மை அறிந்த பிறகு நான்
பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டேன். அதன் பிறகு அறுவை சிகிச்சை செய்து
முழுமையான பெண்ணாக வாழ்ந்து வருவதோடு, சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து
வருகிறேன். சென்னையில் உள்ள சகோதரன் அமைப்பில் என்னை இணைத்துக்கொண்டு பல
சமூக சேவைகளையும் செய்துவந்தேன். மக்களின் துயரத்தைக் கண்டு நான் ஓடிப்
போய் உதவுவதால் எனக்கு எங்க பகுதியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. பலரும்
என்னை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுமாறு கூறினார்கள்.
அடிப்படையில்
எங்க குடும்பம் தி.மு.க பாரம்பர்யத்தைக் கொண்டது. அதனால் நாமக்கல்
மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்துக்குட்பட்ட 2வது வார்டு ஒன்றியக்
கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க-வில் சீட் கேட்டேன். கட்சித் தலைமை எனக்கு
சீட் வழங்கியது. அதையடுத்து, நான் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு 2,689
வாக்குகள் பெற்றேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர்
கந்தம்மாள் சின்னராஜூ 1,751 வாக்குகள் பெற்றார்.
நான்
950 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். இது எனக்கு ரொம்ப
மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக எங்க ஊராட்சி ஒன்றியத்தில் பல
ஊழல்கள் நடைபெற்றுள்ளது. அதைக் கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு தொடுப்பேன்.
பாரபட்சம் காட்டாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் நான் சேவை செய்வேன்.
முதற்கட்டமாக என் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும்
குடியிருப்பு, குடிநீர், கழிவறை, சாக்கடை வசதி என அடிப்படை வசதிகளைச்
செய்து கொடுக்க முயல்வேன். மக்கள் என்னைப் பாராட்டும்படி வாழ்வேன் என்பதே
என்னுடைய லட்சியம்'' என்றார்.
No comments:
Post a Comment