
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடி வரும் ஜாமியா
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது, வாலிபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால்
நேற்று டெல்லியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனை கண்டித்து இன்று
டெல்லியில் பழைய போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட
மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக
மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மகாத்மா காந்தி நினைவுநாளையொட்டி, அவர்கள் ராஜ்காட்டில் உள்ள அன்னாரது நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல திரண்டு இருந்தனர். அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்களும் கூடி இருந்தனர். தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
அப்போது
திடீரென அங்கு புகுந்த வாலிபர், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு
மாணவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து
பிடித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் பெயர் ராம் பகத் கோபால் ஷர்மா
என்று தெரியவந்துள்ளது. 19 வயது இளைஞரான இவர் உத்தரப்பிரதேச மாநிலம்
சேர்ந்தவர் என்று காவல்துறை தெரிவிக்கிறது.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்த மாணவர் சதாப் பாரூக் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
No comments:
Post a Comment