Latest News

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமமுக அசத்தல்.. திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு அடுத்து 3வது பெரிய கட்சியானது

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் 95 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் வெற்றி பெற்று, கூட்டணிகளை தவிர்த்து பார்த்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி, 'மூன்றாவது பெரிய அணியாகக' விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முதல் வெளியாகிவருகின்றன. இன்று மாலை வரை கிடைத்த தகவல் படி, பெரும்பாலான மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

247 மாவட்ட கவுன்சிலர், 2110 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களை, திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. இதில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அடங்கும். 

அதிமுக கூட்டணியில், பாமக, தேமுதிக, பாஜக மற்றும் இதர கட்சிகள் உள்ளன. மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் 213 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியுள்ளது. 1797 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களையும் இந்த கூட்டணி கைப்பற்றியுள்ளது.

திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக கூட்டணியில் உள்ள கட்சிகள் என்று பார்த்தால், பாமகவுக்கு நிறைய இடங்கள் கிடைத்துள்ளன. 16 மாவட்ட கவுன்சிலர்கள் 151 ஒன்றிய கவுன்சிலர்கள் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளனர். 4 மாவட்ட கவுன்சிலர் 94 ஒன்றிய கவுன்சிலர்கள் உடன் தேமுதிக உள்ளது.
கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான பாஜக, 6 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களையும், 87 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களையும் கைப்பற்றி உள்ளது.

திமுக கூட்டணியில், காங்கிரஸ் 13 மாவட்ட கவுன்சிலர், 126 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்திய கம்யூனிஸ்ட் 6, மாவட்ட கவுன்சிலர், 71 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களை பிடித்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள், 1 மாவட்ட கவுன்சிலர், 6 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்துள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகள் ஓரளவுக்கு கை கொடுத்துள்ளன. திமுகவில், காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் பெரிதாக சாதிக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட், பரவாயில்லை என்று சொல்லலாம்.
அதேநேரம் இந்த கூட்டணிகளை தாண்டி, 95 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களை கைப்பற்றி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அசத்தியுள்ளது. கூட்டணிகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்து இந்த விதத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு கிடைத்துள்ளது. கூட்டணியோடு பார்த்தால், இந்த அந்தஸ்து பாமகவுக்கு கிடைக்கும்.

இதுகுறித்து அமமுக, கட்சியின் பிரமுகர், சி.ஆர். சரஸ்வதி பேசுகையில், எங்களுக்கு சின்னம் கூட பொதுவாக ஒதுக்கப்படவில்லை. அப்படியிருந்தும் இந்த அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்தான் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். சின்னம் உள்ளிட்ட அனைத்தும் முறையாக ஒதுக்கப்பட்டு, நேர்மையான வகையில் தேர்தலை சந்தித்து இருந்தால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இன்னும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்றார்.
source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.