
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய ஜாமியா
மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்
நடத்தினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
டெல்லி போலீஸின் இந்தக் கொடூர தாக்குதலில் பல்வேறு மாணவர்களுக்கு காயம்
ஏற்பட்டுள்ள நிலையில் மின்ஹாஜுதின் என்ற மாணவருக்கு இடது கண் பார்வை
பறிபோயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மின்ஹாஜுதின், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
ஜாமியா பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம் (சட்ட மேற்படிப்பு)
- இறுதியாண்டு படித்து வருகிறார். மாணவர்கள் குடியுரிமை சட்டத்
திருத்தத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய அன்று மின்ஹாஜுதினும்
நூலகத்தில் இருந்துள்ளார். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த 20-க்கும்
மேற்பட்ட காவல்துறையினர் மாணவர்கள் மீது லத்திக்களைக் கொண்டு கடுமையாக
தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மின்ஹாஜுதின் பலத்த காயமடைந்தது
மட்டுமல்லாமல் பார்வையையும் பறிகொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக,
இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர் அளித்த பேட்டியில், ``தாக்குதலிலிருந்து
தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக மாணவர்கள் ஓடினர். நான் கழிவறையில் சென்று
ஒளிந்துகொண்டேன். காவல்துறையினர் தாக்குதலுக்குப் பிறகு என்னால் தனியாக
அங்கிருந்து தப்பிச் செல்ல இயலவில்லை. பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன்
அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்" என்று கூறியுள்ளார்.
மின்ஹாஜுதினுக்கு
சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவர் இடது கண்ணில் பார்வை இழந்ததாக
கூறியுள்ளனர். மேலும், ``கருவிழியில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக
மின்ஹாஜுதின் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும். கண்களைச் சுற்றி
ஏற்பட்டுள்ள வீக்கம் குறைந்த பின்னரே எதையும் தெளிவாகச் சொல்ல முடியும்"
என்றும் தெரிவித்துள்ளனர். தாக்குதல் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க
திட்டமிட்டுள்ளதாக மாணவர் மின்ஹாஜுதின் கூறியுள்ளார்.
இதேபோல்
பல்கலைக்கழக நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த மற்றொரு மாணவரான முகமது
முஸ்தஃபா என்பவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இவர், ஜாமியா
பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்து வருகிறார். தாக்குதல் குறித்து பேசிய
அவர், ``நூலகத்தில் காவல்துறையினர் உள்ளே நுழைந்து லத்தியால் தாக்கும்போது
எனது கைகளால் தடுத்தேன். எனது கைகள் மீது விழுந்த அடிகளால் விரல்கள்
உடைந்தன. என்னுடய மடிக்கணினியையும் காவல்துறையினர் உடைத்தனர்" என்றார்.
மாணவர்களின்,
இந்தப் பேட்டிகளை சமூக வலைதளங்களில் அதிகமானவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
நெட்டிசன்கள் காவல்துறையினருக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக தங்களது
கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment