அரசியலமைப்புச் சட்டம் மீது தாக்குதல் நடத்தவும், பாரத
மாதாவின் குரலை ஒடுக்கவும் நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என ராகுல்
காந்தி தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம்
மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து
தில்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாக்கிரகப்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத்
தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ்
பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட
பலர் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,
"நாட்டில் பிரிவினையை உண்டாக்கி, வெறுப்பைப் பரப்ப வேண்டும் என்று மோடிக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதைச் செய்து முடிப்பதில் அவர்தான் நம்பர் -1. இது
ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். மாணவர்களின் குரல் ஒடுக்கப்படுவது ஏன்,
அவர்களுக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தது
ஏன் என்பதை மோடி நாட்டு மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
குரல்களை
ஒடுக்கி, வளர்ச்சியைத் தடுத்து, பொருளாதாரம் உள்ளிட்டவற்றை அழிக்க
எதிரிகள் முயற்சித்தனர். ஆனால், மக்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
எனினும், நமது எதிரிகளால் செய்ய முடியாததைத் தற்போது நரேந்திர மோடி செய்து
வருகிறார்.
உங்களால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியவில்லை,
பொருளாதாரத்தை சீரழித்துள்ளீர்கள். இதனால்தான் நீங்கள் வெறுப்புக்குப்
பின்னாடி ஒளிந்துக்கொண்டிருக்கிறீர்கள். அரசியலமைப்புச் சட்டம் மீது
தாக்குதல் நடத்தவும், பாரத மாதாவின் குரலை ஒடுக்கவும் இந்த நாடு உங்களை
அனுமதிக்காது.
ஆடையைப் பொருத்தவரை உங்களுடைய ஆடையால்
ஒட்டுமொத்த நாட்டுக்கும் உங்களைத் தெரியும். காரணம் ரூ. 2 கோடி மதிப்பில்
ஆடை அணிவது நீங்கள்தான், நாட்டு மக்கள் அல்ல.
இந்திய
அரசியலமைப்பில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள்
ஆகியோரது குரல் இருக்கிறது. உங்களால் அதன் மீது தாக்குதல் நடத்த முடியாது.
இந்தியா உங்களைத் தடுத்து நிறுத்தும்.
சத்யாக்கிரகத்தில் ஒலிக்கும் குரல் காங்கிரஸ் கட்சியினுடையது அல்ல. இது ஒட்டுமொத்த நாட்டின் குரலாகும்" என்றார்.

No comments:
Post a Comment