Latest News

  

மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயர் மட்டுமல்ல; மக்களின் நம்பிக்கையையும் பெறுவோம்: கமல் புத்தாண்டு வாழ்த்து

மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயர் மட்டுமல்ல; மக்களின் நம்பிக்கையையும் பெறுவோம் என்று கமல் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். அதில் அவர் கூறுகையில், "நம் குடும்பத்தார்க்கு, பிறக்கும் இந்தப் புதிய ஆண்டும் நாம் கை குலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறும் ஆண்டு மட்டும் அல்ல. கரம் கோத்துக் களமாட வேண்டிய ஆண்டு.

கடந்த ஆண்டு நம் கட்சிக்கு வளரிளம் ஆண்டு. பயமறியா இளங்கன்றாய், கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களம் கண்டு, நாம் வென்றிருப்பது, மூன்றாவது பெரிய கட்சி எனும் பெயர் மட்டுமல்ல, மக்களின் நம்பிக்கையையும்தான். வரும் ஆண்டு நமக்கும், தமிழகத்துக்கும் முக்கியமான ஆண்டு.

தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல நேர்மையான, அறிவார்ந்த தலைமை வேண்டும் என்ற நம் சிந்தனை, செயல் வடிவம் பெற வேண்டிய ஆண்டு. நாடாளுமன்றத் தேர்தலில் செய்ததை விடப் பல மடங்கு பணி நமக்குக் காத்திருக்கிறது. இன்னும் ஓராண்டில் வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றி, தமிழகம் வளர்ச்சியை விரும்புகிறது என உலக அரங்கிற்கு நாம் விடுக்கப்போகும் அறை கூவல்.

நீங்கள், நான், நாம் அனைவரும் இணைந்து களம் கண்டால் தரணியில் தமிழகம் தழைத்தோங்கி, பாரதி கனவு கண்டது போல, வான் புகழ் கொண்ட தமிழகமாக மீண்டும் ஆக்கலாம். இன்று தொடங்குவது புத்தாண்டு மட்டுமல்ல. நம் வெற்றிப் பயணமும் தான். வெற்றிக்குத் தயாராகுங்கள். நாளை நமதே. அனைவருக்கும் நம் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்" என்று கமல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.