Latest News

  

நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை அமல்படுத்துவது மாநில அரசுகளின் கடமை: கேரள முதல்வருக்கு ரவிசங்கர் பிரசாத் பதில்

நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டியது, அரசியலமைப்புக் கடமையாகும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பதில் அளித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், மேற்கு வங்கம், கேரளா ஆகியவை குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று அறிவித்தன.

இதில், கேரள அரசு நேற்று சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தை கூட்டி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரித் தீர்மானம் நிறைவேற்றியது. 

கேரள அரசு சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய சில மணிநேரங்களில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது, "கேரள முதல்வர் பினராயி விஜயன் சிறந்த சட்ட வல்லுநரைக் கலந்தாய்வு செய்வது நல்லது. ஏனென்றால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது பட்டியலில் இருக்கிறது. இதை நீக்குவதற்கும், புறக்கணிப்பதற்கும் மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை. நாடாளுமன்றம் மட்டுமே இதற்குத் தனி அதிகாரம் படைத்தது. சட்டப்பேரவை அல்ல, அது கேரள சட்டப்பேரவையாக இருந்தாலும் அதிகாரம் கிடையாது" எனத் தெரிவித்தார்.
கேரள முதல்வர் பினராயிவிஜயன் : கோப்புப்படம்
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேச்சுக்கு இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்தார். அவர் அளித்த பேட்டியில், " ஒவ்வொரு மாநிலச் சட்டப்பேரவைக்கும் சிறப்பு உரிமை இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளையும், பேச்சையும் எங்கும் கேட்டதில்லை. தற்போதுள்ள சூழலில் எதையும் நாங்கள் உதாசினப்படுத்த முடியாது.

எப்போதும் இல்லாத சம்பவங்கள் இந்த தேசத்தில் சமீபகாலமாக நடக்கின்றன. சட்டப்பேரவைக்கு என அரசியலமைப்பில் பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றன. அதை ஒருபோதும் மீறக்கூடாது." எனத் தெரிவித்தார்
கேரள முதல்வரின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூற முடியாது. அது மாநில அரசுகளின் அரசியலமைப்புச் சட்டக்கடமை. கேரள முதல்வர் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறினால், நல்ல சட்ட வல்லுநரை கலந்தாய்வு செய்வது நல்லது.

ஏனென்றால் மத்திய அரசு நிறைவேற்றிய சட்டம் என்பது அரசியலமைப்பில் மத்தியஅரசின் பட்டியலில் உள்ளவற்றின் மீது சட்டம் இயற்றியுள்ளது. இதைநடைமுறைப்படுத்த முடியாது என்று மாநில அரசுகள் கூற முடியாது.
அரசியலமைப்புச் சட்டம் 245 (பிரிவு2) கீழ் நாடாளுமன்றம் இயற்றிய எந்த சட்டத்தையும் மாநிலஅரசுகள் செல்லாது என்று அறிவிக்க இயலாது " எனத் தெரிவித்தார்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.