திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழையால் முக்கிய அணைகளில் ஒன்றான
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. திருநெல்வேலியில் 4
வீடுகள் இடிந்தன.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு
அணைகள் முழு கொள்ளளவை எட்டியிருப்பதால் அணைகளுக்கு வரும் தண்ணீர்
திறந்துவிடப்படுகிறது.
இதனால் தாமிரபரணியில் தொடர்ந்து
வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது. பாபநாசம் படித்துறை மண்டபம்,
திருநெல்வேலியில் குறுக்குத்துறை முருகன் கோயில் மண்டபம், தைப்பூச மண்டபம்
உள்ளிட்ட ஆற்றங்கரையோர கல் மண்டபங்களை சூழ்ந்து வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
மாவட்டத்திலுள்ள முக்கிய அணையான மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2707 கனஅடி
தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நீர்மட்டம் நேற்றிலிருந்து 4 அடி
உயர்ந்து 100 அடியை இன்று மாலையில் எட்டியது.
இந்த அணையின்
உச்சநீர்மட்டம் 118 அடியாகும். தொடர்ந்து மழை நீடித்தால் இந்த அணையும்
விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாபநாசம் அணைப்பகுதியில்
நேற்று காலை நிலவரப்படி 48 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அணைக்கு
வினாடிக்கு 5468 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 5258
கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் 141.50 அடியாக
இருந்தது. சேர்வலாறு நீர்மட்டம் 145.31 அடியாக இருந்தது. வடக்குபச்சையாறு,
நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் இன்னும் நிரம்பவில்லை.
நெல்லை மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் நேற்று காலை பதிவான மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்-
48, சேர்வலாறு- 26, மணிமுத்தாறு- 12.6, கொடுமுடியாறு- 10,
அம்பாசமுத்திரம்- 14.60, சேரன்மகாதேவி- 18.40, நாங்குநேரி- 5.50,
பாளையங்கோட்டை- 9.20, ராதாபுரம்- 9, திருநெல்வேலி- 6.
நெல்லையில் 4 வீடுகள் இடிந்தன
திருநெல்வேலியில்
தொடர் மழையால் கரையிருப்பு ஆர்எஸ்ஏ நகரில் பார்வதி, கணபதி, ஜெகநாதன்
மற்றும் பண்டாரம் ஆகிய 4 பேரின் வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. கடந்த
சில நாட்களுக்குமுன் இந்த வீடுகளை இவர்களது குடும்பத்தினர் காலி
செய்துவிட்டு சென்றிருந்தனர். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
வருவாய்த்துறையினர் மழை சேதம் குறித்து கணக்கிட்டு வருகிறார்கள்.
No comments:
Post a Comment